வடமாகாண ஆசிரியர் இடமாற்றப்பட்டியலில் சுயநல செயற்பாடுகள் – இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்!

வடமாகாண கல்வித் திணைக்களத்தால் சமீபத்தில் வெளியிடப்பட்ட சேவையின் தேவை கருதிய ஆசிரியர் இடமாற்றப்பட்டியலில் இடம்பெற்றுள்ள சில நடவடிக்கைகள் குறித்தும், அதனுடன் தொடர்புடைய சுயநல செயற்பாடுகள் குறித்து கடுமையான கவலை வெளியிட்டுள்ளது இலங்கை ஆசிரியர் சேவை சங்கம்.

இச் சங்கத்தின் உப செயலாளர் காரளசிங்கம் பிரகாஷ், இன்று (12) யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விசேட ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு உரையாற்றியபோது, இதனைத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

“இறுதியாக வடமாகாண கல்வித் திணைக்களத்தால் வெளியிடப்பட்ட இடமாற்றப்பட்டியலில் பெயர் குறிப்பிடப்பட்டுள்ள ஆசிரியர்கள், உரிய நிர்வாக நடைமுறைக்கேற்ப தங்களுடைய மேன்முறையீடுகளை அதிபர் ஊடாக வலயம் அல்லது மாகாண கல்வி திணைக்களத்திற்கு சமர்ப்பித்து தீர்வினைப் பெற முடியும்.

ஆசிரியர்களுக்கான நியாயங்களைப் பெற்றுத்தர இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் எப்போதும் முன்நின்று செயற்படும்.

அதேவேளை, இடமாற்ற சபையில் இடம்பெற்ற சில நடவடிக்கைகள் குறித்து அவர் கடும் விமர்சனங்களை முன்வைத்தார்.

 தமிழ் தேசிய மக்கள் முன்னணியுடன் தொடர்புடைய இலங்கை ஆசிரியர் சங்கத்தின் முக்கிய பதவியாளர் ஒருவர் தனது சகோதரிக்காக தன்னிச்சையாகச் செயல்பட்டு, பொய்யான கருத்துகளைப் பரப்பி ஆசிரியர்களை தவறாக வழிநடத்த முயற்சித்துள்ளார். இதனால் ஆசிரியர்களும் மாணவர்களும் பாதிக்கப்படுகின்றனர்.

இவ்வாறான செயல்கள் வடமாகாண கல்வியை சீரழிக்கும் நோக்கத்துடன் மேற்கொள்ளப்படுவதாகவும், கல்வி அமைப்பின் நம்பகத்தன்மையை பாதிப்பதாகவும் அவர் குறிப்பிட்டார்.

அத்தோடு, இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பிரதிநிதி ஒருவர் மேற்படி சகோதரியின் இடமாற்றத்தை இரத்துச் செய்யுமாறு கோரிக்கை விடுத்து, முரண்பட்ட நிலையில் இடமாற்ற சபையிலிருந்து வெளிநடப்பு செய்தது கவலைக்குரிய விடயமாகும்.

யுத்தத்தால் பாதிக்கப்பட்ட வடக்கு மாணவர்களின் கல்வி முன்னேற்றத்தை விட குடும்ப நலனை முன்னிலைப்படுத்தும் இவ்வாறான சுயநல நடவடிக்கைகளை எங்கள் சங்கம் வன்மையாகக் கண்டிக்கிறது.

எனவே, வடமாகாண ஆசிரியர்கள் தங்களுக்கான நியாயங்களை உரிய வழிமுறையில் பெற்றுக்கொள்ளவும், சுயநல அரசியல் செயற்பாடுகளுக்கு ஆதரவாகச் செல்லாமல் விழிப்புடன் செயற்படவும் என்றார்.

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *