செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் குழப்ப நிலை; தலைவரை உட்செல்ல விடாமல் தடுத்த ஆளுங்கட்சி உறுப்பினர்கள்!

செட்டிகுளம் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டம் செட்டிகுளம் பிரதேச செயலகத்தில் இன்று  இடம்பெற்ற போது அங்கு வருகை தந்த அபிவிருத்தி குழு தலைவரும் கூட்டுறவு பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவை உள்ளே செல்லவிடாது செட்டிகுளம் பிரதேசசபையின் ஆளும் கட்சி உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தினர்.

செட்டிகுளம் பிரதேச சபையின் அபிவிருத்தி குழு கூட்டத்தில் பிரதேச சபை தலைவர் உட்பட அவர் கட்சி சாராத இருவரை கூட்டத்துக்கு கலந்து கொள்ளுமாறு பிரதேச செயலாளரால் அழைப்பு விடுக்கப்பட்டிருந்தது.

எனினும் வட்டார உறுப்பினர்கள் மக்களால் தெரிவு செய்யப்பட்டவர்கள் என்ற ரீதியில் அனைத்து சபை உறுப்பினர்களையும் பிரதேச அபிவிருத்தி குழு கூட்டத்தில் அனுமதிக்க வேண்டும் என தெரிவித்து செட்டிகுளம் பிரதேச ஆளுங்கட்சி உறுப்பினர்கள் கறுப்பு உடை அணிந்து பிரதேச செயலக வாயிலில் கூடியிருந்தனர்.

இதன்போது வருகை தந்த பாராளுமன்ற உறுப்பினர்களான ப.சத்தியலிங்கம், காதர் மஸ்தான், முத்து முகமது ஆகியோரை அனுமதித்த பிரதேச சபை உறுப்பினர்கள் அவர்களோடு பிரதேசசபை வளாகத்தில் நீண்ட நேரம் கலந்துரையாடி இருந்தனர்.

இதன் பின்னர் அங்கு வருகை தந்த அபிவிருத்தி குழு தலைவரும் பிரதி அமைச்சருமான உபாலி சமரசிங்கவின் வாகனத்தினை பிரதேச செயலகத்திற்குள் நுழைய விடாது சபை உறுப்பினர்கள் தடுத்து நிறுத்தி இருந்தனர்.

இதன் போது தங்களையும் கூட்டத்தில் அனுமதிக்க வேண்டுமென பிரதேச சபை உறுப்பினர்கள் கோரிக்கை வைத்திருந்தனர்.

இதன் போது கருத்து தெரிவித்த அபிவிருத்தி குழு தலைவர், இது அரசியல் செயற்பாடு அல்ல. பாராளுமன்றத்தினால் கொண்டுவரப்பட்ட ஒரு நடைமுறை. ஆகவே இந்த விடயம் பாராளுமன்றத்தின் ஊடாகவே செயல்படுத்தப்பட வேண்டும். 

ஆகவே இங்கே உள்ள பாராளுமன்ற உறுப்பினர்கள் இது தொடர்பில் பாராளுமன்றத்தில் கதைத்து இதற்கான தீர்வை பெற்றுக் கொள்ள வேண்டும். இல்லையேல் நீதிமன்றத்தை நாட வேண்டும் என்று தெரிவித்திருந்தார்.

பிரதேச சபை உறுப்பினர்கள் மீண்டும் இந்த விடயம் தொடர்பில் சுட்டிக்காட்டி தர்க்கத்தில் ஈடுபட்ட நிலையில் குறித்த கூட்டத்திற்கு அனைத்து பிரதேச சபை உறுப்பினர்களும் செல்வதற்கு அனுமதிக்கப்பட்டது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *