சீதுவை, பேஸ்லைன் வீதியில் மோட்டார் வாகனம் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது பொலிஸ் விசேட அதிரடிப் படையினரால் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நேற்று சனிக்கிழமை இரவு பொலிஸ் விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கு அமைய சந்தேகத்திற்கு இடமான வாகனம் ஒன்றை பின் தொடர்ந்து சென்று சோதனைக்கு உட்படுத்தியதாக பொலிஸ் ஊடக பேச்சாளரும், சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் வாகனத்தில் பயணம் செய்த ஒருவர் காயமடைந்த நிலையில் நீர்க்கொழும்பு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளார் என தெரிவிக்கப்படுகின்றது.
மேலும் 44 வயதுடைய சீதுவை பிரதேசத்தை சேர்ந்த நபர் ஒருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
அத்தோடு குறித்த நபர் பல்வேறு குற்றச் சம்பவங்களுடனும் மற்றும் 6 கொலை சம்பவங்களுடனும் தொடர்பு பட்ட நபர் என தெரிய வந்ததுள்ளதாக பொலிஸ் ஊடக பேச்சாளர் குறிப்பிட்டார்.
மேலும் துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்படும் போது மோட்டார் வாகனத்தில் மேலும் இருவர் இருந்ததாகவும், குறித்த இடத்தில் இருந்து மைக்ரோ ரக கைத் துப்பாக்கி ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸ் ஊடக பேச்சாளர் தெரிவித்தார்.
மேலும் இச் சம்பவம் தொடர்பில் சீதுவை பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.