இராணுவத் தளபதி லெப்டினன் ஜெனரல் லசந்த ரொட்ரிகோவின் அறிவுறுத்தலின் பேரில், இராணுவத்தில் நீண்ட காலமாக பயன்பாட்டிலிருந்து பழுதடைந்திருந்த 76 வாகனங்களை நவீனமயமாக்க இலங்கை இராணுவம் நடவடிக்கை எடுத்திருந்தது.
இந்த வாகனங்கள் 2025 ஒக்டோபர் 24 முதல் (இன்று) இராணுவ சேவையில் மீண்டும் சேவையில் இணைக்க திட்டமிடப்பட்டுள்ளது.
தூய இலங்கை திட்டத்துடன் இணைந்து செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தில் நவீனமயமாக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் இராணுவ சேவையில் அறிமுகப்படுத்துவதன் மூலம், வெளிநாடுகளில் இருந்து வாகனங்களை இறக்குமதி செய்வதற்கு செலவிடப்படும் பெரும் தொகை அந்நிய செலாவணி சேமிக்கப்பட்டது.
மேலும், இந்த வாகனங்களை மீண்டும் பயன்படுத்துவதன் மூலம், இராணுவத்தால் வாடகை அடிப்படையில் பெறப்படும் வாகனங்களுக்கு மாதந்தோறும் செலவிடப்படும் சுமார் 10 மில்லியன் ரூபா அரச நிதியை சேமிக்க முடியும். அந்த பணத்தை இராணுவம் மற்றும் நாட்டின் வளர்ச்சிக்கு பயன்படுத்த முடியும்.
இலங்கை மின்சார மற்றும் இயந்திர பொறியியல் படையணியினால் செயற்படுத்தப்பட்ட இத்திட்டத்தின் முதல் கட்டத்தின் கீழ், லொறிகள், பேருந்துகள், தண்ணீர் பவுசர்கள், யூனிப்பெல்கள், கெப்கள், ஆம்புலன்ஸ்கள், வேன்கள் மற்றும் கழிவுநீர் பவுசர்கள் உள்ளிட்ட 76 வாகனங்கள் புதுப்பிக்கப்பட்டு மீண்டும் சேவையில் ஈடுபடுத்தப்பட்டன.






