கொலைக் கலாசாரத்தை இல்லாதொழிக்க வேண்டும்- வெலிகம தவிசாளரின் இறுதி அஞ்சலியில் சஜித் தெரிவிப்பு!

வெலிகம பிரதேச சபையில் பொதுமக்கள் தினத்தன்று இனந்தெரியாத துப்பாக்கிதாரிகளால் சுட்டுப் படுகொலை செய்யப்பட்ட வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்கிரமசேகரவின் இல்லத்துக்கு இன்று ஞாயிற்றுக்கிழமை சென்ற எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாஸ, அவரது பூதவுடலுக்கு இறுதி அஞ்சலி செலுத்தினார்.

அன்னாரின் குடும்பத்தினர், உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு தனது ஆழ்ந்த அனுதாபங்களை எதிர்க்கட்சித் தலைவர் தெரிவித்துக்கொண்டார்.

அன்னாரின் இந்தக் கொலை தொடர்பில் பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுத்து, அவரது குடும்பத்தினருக்கு உரிய நீதியை நிலைநாட்ட வேண்டும் என்று எதிர்க்கட்சித் தலைவர் ஊடகங்கள் முன்னிலையில் கூறினார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,  

“லசந்த விக்கிரமசேகரவின் கொலைச் சம்பவத்தை வன்மையாகக் கண்டிக்கின்றோம். கொலைக் கலாசாரம் சமூகத்தில் தொடர்ந்து செயற்பட்டு வருகின்றது. மக்கள் வாக்குகளால் தேர்ந்தெடுக்கப்பட்ட, சபைக்குத் தெரிவான ஏனைய உறுப்பினர்களால் தவிசாளராகத்  தெரிவு செய்யப்பட்ட ஒருவரை இவ்வாறு படுகொலை செய்வது, நாட்டில் கொலைக் கலாசாரத்தின் மற்றொரு அங்கமாகும்.

இன்று நாட்டில் சட்டம் – ஒழுங்கு இல்லை. காட்டுச் சட்டம் மட்டுமே காணப்படுகின்றது. இதன் காரணமாக, குடிமக்களின் வாழ்க்கை சீரழிந்து போயுள்ளது. இந்தக் கொலைக் கலாசாரத்தை நாம் இல்லாதொழிக்க வேண்டும்.

தற்போதைய அரசின் பலவீனம் காரணமாக, சமூகம் பல்வேறு பிரிவினரின் பிடியில் சிக்கிப் போயுள்ளது. இது மக்களின் வாழும் உரிமை மீது விழுந்த அடியாக அமைந்து காணப்படுகின்றது.

மக்களின் வாழும் உரிமையை நாம் பாதுகாக்க வேண்டும். ஆகையால் இந்தக் கொலைகாரர்களுக்கு தண்டனையைப் பெற்றுக் கொடுக்க வேண்டும். லசந்த விக்கிரமசேகரவின் கொலை குறித்து பக்கச்சார்பற்ற விசாரணையை முன்னெடுக்க வேண்டும்.

தனக்கு உயிர் அச்சுறுத்தல் காணப்படுவதாகக் குறிப்பிட்டு பிரமாணப் பத்திரம் மூலம் பொலிஸ்மா அதிபரிடம் அவர் பாதுகாப்பு கோரிய போதிலும், உரிய பாதுகாப்பு வழங்கப்படவில்லை. இவ்வாறு பாதுகாப்பு வழங்காமை குறித்தும் விசாரணை நடத்த வேண்டும்.” – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *