தொடர்ச்சியாக பெய்துவரும் கனமழை காரணமாக புத்தளம் மாவட்டத்தில் சனிக்கிழமை (25) மாலை 4 மணிவரையான நிலவரப்படி, சுமார் 283 குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாக புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி தெரிவித்தார்.
அந்த வகையில் புத்தளம் மாவட்டத்தின் 23 கிராம சேவகர் பிரிவுகளில், சுமார் 283 குடும்பங்களைச் சேர்ந்த 1152 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
புத்தளம் மாவட்டத்தில் புத்தளம் பிரதேச செயலாளர் பிரிவிலேயே அதிகமானவர்கள் பாதிக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 2 கிராம சேவகர் பிரிவுகளில் 147 குடும்பங்களை சேர்ந்த 681 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மஹாவெ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 1 கிராம சேவகர் பிரிவில் 11 குடும்பங்களைச் சேர்ந்த 34 பேரும், நவகத்மேகம பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 1 கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 18 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
முந்தல் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஒரு கிராம சேவகர் பிரிவில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளில் 3 குடும்பங்களைச் சேர்ந்த 10 பேரும், சிலாபம் பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 3 கிராம சேவகர் பிரிவுகளில் 7 குடும்பங்களைச் சேர்ந்த 24 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வன்னாத்தவில்லு பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 2 கிராம சேவகர் பிரிவில் 93 குடும்பங்களைச் சேர்ந்த 304 பேரும், மாதம்பை பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 14 குடும்பங்களைச் சேர்ந்த 68 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலாளர் பிரிவுக்குற்பட்ட ஒரு கிராம சேவகர் பிரிவில் ஒரு குடும்பத்தைச் சேர்ந்த 3 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையத்தின் கடமை நேர அதிகாரி மேலும் தெரிவித்தார்.
இதேவேளை, சிலாபம் பிரதேச செயலகத்திற்குட்பட்ட அம்பகந்ததவள மற்றும் சவரான கிராம சேவகர் பிரிவில் 7 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன், புத்தளம் மாவட்டத்தில் மொத்தமாக 17 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.
மேலும், நாத்தாண்டிய பிரதேச செயலகத்தின் தெற்கு முது கட்டுவ பிரிவில் உள்ள கால்நடை அலுவலக வளாகம் பாதிக்கப்பட்டுள்ளதுடன், சிலாபம் சவாரான பகுதியில் உள்ள சமூக மண்டபம் ஒன்றும் பாதிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.





