ஹட்டன் பிலான்டேஷனின் நிர்வாகத்திற்குட்பட்ட தங்கக்கலை தோட்ட அலுவலகம் மூடப்பட்டு ஊவாக்கலை தோட்டத்திற்கு மாற்றப்படுவது தொடர்பாக தொழிலாளர்கள் கடும் எதிர்ப்பைத் தெரிவித்துள்ளனர்.
இதனைத் தொடர்ந்து, இன்று காலை முதல் சுமார் 500க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
கேம்பிரி மேற்பிரிவு, கேம்பிரி கீழ்பிரிவு, தங்கக்கலை மேற்பிரிவு, கெல்சி தங்கக்கலை உள்ளிட்ட பிரிவுகளில் பணிபுரியும் தொழிலாளர்கள் அனைவரும் ஒன்றிணைந்து பணிபகிஷ்கரிப்பில் ஈடுபட்டுள்ளனர்.
இன்று தோட்ட முகாமையாளருடன் நடைபெற்ற கலந்துரையாடலில், அகில இலங்கை தோட்ட தொழிலாளர் சங்க பிரதிநிதிகள், தொழிற்சங்க பிரதிநிதிகள் மற்றும் மக்கள் பிரதிநிதிகள் பங்கேற்று தொழிலாளர்களின் நியாயமான கோரிக்கைக்கு ஆதரவாக வலியுறுத்தினர்.
எனினும், முகாமையாளரை அழைத்து மக்கள் பிரதிநிதிகள் கலந்துரையாடிய போதிலும் நிர்வாகம் எந்தவிதமான சுமூகமான தீர்வுக்கும் இணக்கம் தெரிவிக்கவில்லை. இதனால் தொழிலாளர்கள் அதிருப்தியடைந்த நிலையில் வேலை நிறுத்தத்தை தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானித்துள்ளனர்.
தொழிலாளர்கள் தெரிவித்ததாவது, தங்கக்கலை அலுவலகம் மூடப்பட்டு மாற்றபடுவது எங்கள் வாழ்வாதாரத்துக்கும், பணியிட வசதிகளுக்கும் பாதிப்பை ஏற்படுத்தும். நியாயமான தீர்வு கிடைக்கும் வரை வேலை நிறுத்தம் தொடரும் என தெரிவித்தனர்.
நிலைமைக்கமைவாக லிந்துலை பொலிஸ் அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வரவழைக்கப்பட்டிருந்தனர்.
தொழிலாளர்கள் தங்களின் உரிமை, வேலை பாதுகாப்பு, மற்றும் வாழ்வாதாரத்தைக் காக்கும் நோக்கில் உறுதியுடன் இந்த போராட்டத்தை முன்னெடுத்து வருகின்றனர்.





