மதுபான உற்பத்திக்கான கலால் வரி, கட்டணங்களை செலுத்துவது தொடர்பான நடைமுறைகள் மற்றும் காலக்கெடுவை திருத்தி ஒரு வர்த்தமானி அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
இன்று (28) முதல் அமுலுக்கு வந்த இந்த வர்த்தமானியை, நிதி, பொருளாதார ஸ்திரத்தன்மை மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சராக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க வெளியிட்டுள்ளார்.
புதிய விதிமுறைகள், கலால் கட்டளைச் சட்டத்தின் பிரிவு 22 இல் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளபடி, ஒவ்வொரு உரிமதாரரும் குறிப்பிட்ட திகதியில் அல்லது அதற்கு முன் தேவையான கலால் வரியைச் செலுத்த வேண்டும்.
உரிமதாரர் பரிந்துரைக்கப்பட்ட திகதியிலிருந்து 30 நாட்களுக்குள் உரிய வரி அல்லது கட்டணத்தை முழுமையாகச் செலுத்தத் தவறினால், அந்த உரிமதாரரின் போத்தலில் அடைப்பதற்கான உரிமங்கள் (bottling license) இடைநிறுத்தப்படும்.
இந்த ஒழுங்குமுறை இதற்கு முன்பு செயல்படுத்தப்படவில்லை என்றும், இப்போது அது ஒரு புதிய சட்ட ஏற்பாடாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளதாகவும் கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேலும், உரிமம் வைத்திருப்பவர் குறிப்பிட்ட திகதியிலிருந்து 90 நாட்களுக்குள் உரிய வரிகள் அல்லது கட்டணங்களைச் செலுத்தத் தவறினால், புதிய வர்த்தமானியின்படி, அந்த நபர் வைத்திருக்கும் அனைத்து உரிமங்களும் இடைநிறுத்தப்படும்.
முன்னதாக, உரிமம் இடைநிறுத்த காலம் ஆறு மாதங்களாக இருந்தது, ஆனால் புதிய விதிமுறைகள் அதை மூன்று மாதங்களாகக் குறைத்துள்ளதாக கலால் திணைக்களம் தெரிவித்துள்ளது.
கலால் வரி ஏய்ப்பைக் குறைப்பதற்கும் உரிமதாரர்களிடையே அதிக இணக்கத்தை உறுதி செய்வதற்கும் வரி செலுத்தும் காலக்கெடு திருத்தப்பட்டதாகவும் திணைக்களம் சுட்டிக்காட்டியுள்ளது.







