வெலிகம பிரதேச சபையின் தவிசாளர் லசந்த விக்ரமசேகரவின் கொலையுடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி என நம்பப்படும் சந்தேகநபர் கைது செய்யப்பட்ட உடனே பொலிஸாருக்கு பல்வேறு தகவல்களை வெளிப்படுத்தும் காணொளி காட்சிகள் வெளியாகியுள்ளன.
இதன்படி குறித்த காணொளியில், குறித்த துப்பாக்கிச் சூட்டை நடத்த துபாயிலிருந்து உத்தரவு கிடைத்ததாக சந்தேகநபர்தெரிவித்துள்ளார்.
வெளிநாட்டிலுள்ள ஒரு தனிநபரிடமிருந்து கிடைத்த அறிவுறுத்தலின் பேரில், தான் செயற்பட்டதாக அவர் பொலிஸ் அதிகாரிகளிடம் தெரிவிப்பது அந்த காணொளியில் பதிவாகியுள்ளது.
குறித்த சந்தேகநபர் மஹரகம, நாவின்ன பகுதியில் வைத்து நேற்று கைது செய்யப்பட்டார்.
இந்தநிலையில் குறித்த சம்பவத்திற்கான முழுமையான நோக்கத்தைக் கண்டறியவும், இந்தச் சம்பவத்துடன் தொடர்புடைய மேலதிக நபர்களை அடையாளம் காணவும் மேலதிக விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
வெலிகம பிரதேச சபையின் தலைவர் லசந்த விக்ரமசேகர சமீபத்தில் பிரதேச சபைக்குள் வைத்து சுட்டுக் கொலை செய்யப்பட்டார். தனது கடமைகளைச் செய்து கொண்டிருந்தபோது சபைக்குள் நுழைந்த சந்தேகநபர், அவர் மீது துப்பாக்கிச்சூட்டை மேற்கொண்டு தப்பிச் சென்றார்.
துப்பாக்கிச் சூட்டில் பலத்த காயமடைந்த பிரதேச சபைத் தலைவர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் உயிரிழந்தார்.
சிசிரிவி காட்சிகளை வைத்து 4 பேர் கொண்ட சிறப்பு பொலிஸ் குழு தீவிர விசாரணையை மேற்கொண்டு வருகின்றது.
இந்த நிலையில் கொலையுடன் தொடர்புடைய பிரதான சந்தேக நபர் உட்பட பலர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.




