நடிகர் விஜய் வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்த ரோல்ஸ் ராய்ஸ் காருக்கு நுழைவு வரியில் இருந்து விலக்கு அளிக்க கோரி தொடர்ந்த வழக்கை சென்னை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்ததோடு, ரூ.1 லட்சம் அபராதமும் விதித்துள்ளது.
நடிகர்கள் நிஜத்திலும் ஹீரோவாக நடந்து கொள்ள வேண்டும் என்று அறிவுரையும் வழங்கியது.
இதையடுத்து சமூக வலைத்தளத்தில் விஜய்க்கு ஆதரவாகவும், எதிராகவும் ஹேஷ்டேக் டிரெண்டாகி பரபரப்பானது.
Advertisement
இந்நிலையில், வாகன நுழைவுவரி பாக்கியை செலுத்த நடிகர் விஜய் தயாராக இருப்பதாகவும், அதேசமயம் தன்னை பற்றி தீர்ப்பில் பதிவு செய்த விமர்சனங்களை நீக்கக் கோரியும், அபராதத்தை ரத்து செய்யக்கோரியும் அவர் தரப்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்ய இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன.
இதுகுறித்து விஜய்யின் வழக்கறிஞர் குமரேசன் தெரிவிக்கையில்,
வரி கட்டக்கூடாது என்ற நோக்கம் இந்த வழக்கில் துளியும் இல்லை.
வரி விதிப்பில் நீதிமன்றத்தின் தீர்ப்பும் அரசின் அணுகுமுறையும் முரண்பட்டு இருந்ததால்தான் இந்த வழக்கு தொடரப்பட்டது.
அப்போதே நுழைவு வரி கட்டித்தான் ஆக வேண்டும் என்ற உத்தரவு இருந்திருந்தால் எந்த ஆட்சேபனையும் இன்றி விஜய் கட்டியிருப்பார்.
சமூகத்தில் தனக்குள்ள செல்வாக்கைப் பயன்படுத்தி, வரி விதிப்பிலிருந்து யாரும் விலகி ஓடவோ, வெளியேறவோ முடியாது.
அது விஜய்க்கும் நன்றாகத் தெரியும்.
ஆனால், இப்போது நீதிபதி ஆட்சேபனைக்குரிய கருத்துகளைத் தெரிவித்து, அபராதமும் விதித்திருக்கிறார்.
தீர்ப்பில் எங்களுக்கு இருக்கும் ஆட்சேபனைக்குரிய பகுதிகளை எதிர்த்து மேல்முறையீடு செய்யவிருக்கிறோம்.
இது தனி நீதிபதியின் தீர்ப்பு என்பதால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தான், எங்கள் மேல்முறையீட்டு மனுவைத் தாக்கல் செய்யப்போகிறோம்.
இந்த மேல்முறையீடுகூட வரி கட்ட முடியாது என்பதற்காகவோ, அபராதம் செலுத்தக் கூடாது என்பதற்காகவோ கிடையாது.
ஆட்சேபனைக்குரிய கருத்துகளை எதிர்த்துதான்.
இவ்வளவு காரசாரமான மன வருத்தமளிக்கும் கருத்துகளைத் தெரிவித்திருக்கக் கூடாது என்பதுதான் எங்களது வாதம்.
அதை சட்டப்படியாக எதிர்கொள்வோம் என தெரிவித்துள்ளார்.