மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரை பகுதிக்குள் ஊடுருவியுள்ள காட்டுயானைகளை இரண்டு தினங்களில் வெளியேற்றுவதற்கான நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாகவும் இது தொடர்பில் வனஜீவராசிகள் திணைக்களம்,இராணுவத்தினர் இணைந்து இந்த செயற்பாடுகளை முன்னெடுக்கவுள்ளதாவும் இலங்கை தமிழரசுக்கட்சி மட்டக்களப்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் தெரிவித்தார்.
மட்டக்களப்பு மாவட்டத்தின் எழுவான் கரை பகுதியில் சில வாரங்களாக தொடரும் காட்டு யானை அட்டகாசத்தினை கட்டுப்படுத்துவது தொடர்பிலான விசேட கலந்துரையாடல் இன்று (28) மாலை மட்டக்களப்பு மண்முனைப்பற்று பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
பாராளுமன்ற உறுப்பினர் இரா.சாணக்கியன் ஏற்பாடு செய்த இக்கலந்துரையாடலில் பிரதேச செயலாளர் தெட்சணாகௌரி தினேஸ், பிரதேச சபை தவிசாளர் செந்தில்குமார், வனவிலங்கு திணைக்கள அதிகாரி சுரேஸ்இ மற்றும் குருக்கள்மடம் இராணுவ முகாம் தளபதி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
இதன்போது கடந்த சில வாரங்களாக மண்முனை பற்று பிரதேச செயலக எல்லைக்குட்பட்ட பாலமுனை தாழங்குடா புதுக்குடியிருப்பு கிரான்குளம் ஆகிய பகுதிகளில் யானைகளின் நடமாட்டம் மற்றும் அதன் அட்டகாசங்கள் அதிகரித்துள்ளதாகவும் அவற்றை கட்டுப்படுத்த எவ்வாறான வழிமுறைகளை கையாள வேண்டும் என்பது தொடர்பாக குறித்த கலந்துரையாடல் நடைபெற்றமை குறிப்பிடத்தக்கது.
இதேபோன்று மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலாளர் பிரிவுக்குட்பட்ட குருக்கள்மடம் மாங்காடு தேற்றாத்தீவு களுதாவளை களுவாஞ்சிகுடி ஆகிய பகுதிகளில் புகுந்துள்ள காட்டுயானைகள் தொடர்பிலும் அவற்றினை வெளியேற்றுவது குறித்தும் இதன்போது ஆராயப்பட்டது.
இது தொடர்பில் கருத்து தெரிவித்த சாணக்கியன் எம்பி.
மட்டக்களப்பு மாவட்டத்தில் விவசாய நடவடிக்கைகள் ஆரம்பிக்கின்ற இந்த தருணத்தில் காட்டு யானைகளின் தொல்லை அதிகரிப்பது வழமையான ஒரு விடயம். ஆனால் இப்போது வழமைக்கு மாறாக நகர் பகுதிகளிலும் குறிப்பாக மண்முனை பற்று பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட பகுதிகளிலும் மற்றும் மண்முனை தென் எருவில் பற்று பிரதேச செயலக பிரிவிலும் உள்ள பகுதிகளிலும் கடந்த வாரமாக யானைகளின் நடமாட்டம் அதிகமாக காணக் கூடியதாக இருக்கின்றது.
கடந்த வாரம் இந்த பிரச்சனைகள் தொடர்பாக பாராளுமன்ற அமர்வு நிறைவு பெற்றதன் பின்னர் அமைச்சரிடம் இவை தொடர்பாக பல கோரிக்கைகளை முன் வைத்திருக்கின்றோம்.
இன்றில் இருந்து இரண்டு நாட்களுக்குள் இந்த யானைகள் எப்பகுதியில் இருக்கின்றது என்பதனை உடனடியாக தவிசாளருக்கோ அல்லது எனக்கோ அல்லது வனவிலங்கு திணைக்களத்தினருக்கோ தொலைபேசி அழைப்பின் ஊடாக தெரியப்படுத்தினால் நாங்கள் உடனடியாக ராணுவத்தினருக்கும் தெரிவித்து அவற்றுக்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் என தெரிவித்துள்ளார்





