2025 ஐசிசி மகளிர் உலகக் கிண்ணத்தின் இரண்டாவது அரையிறுதிப் போட்டியில் இந்தியா இன்று (30) நடப்பு சாம்பியனான அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளவுள்ளது.
இந்தப் போட்டியானது இன்று பிற்பகல் 3.00 மணிக்கு நவி மும்பையில் அமைந்துள்ள டி.ஒய்.பாட்டீல் மைதானத்தில் ஆரம்பமாகவுள்ளது.
கவுகாத்தியில் இங்கிலாந்தை வீழ்த்தி தென்னாப்பிரிக்கா ஏற்கனவே இறுதிப் போட்டிக்கு முதல் முறையாக நுழைந்துள்ள நிலையில், இப்போது அனைவரின் பார்வையும் மும்பையை நோக்கி திரும்பியுள்ளது.
அதேநேரம், அங்கு போட்டிக்கு அச்சுறுத்தலை ஏற்படுத்தக் கூடும் என்று கணிக்கப்பட்டுள்ள வானிலையையும் கவன்திற் கொள்ள வேண்டும்.
ஹர்மன்ப்ரீத் கவுர் தலைமையிலான அணி, தொடர் முழுவதும் பின்னடைவுகளில் இருந்து மீண்டு, போட்டியில் நிலைத்து நிற்கும் திறனைக் காட்டியுள்ளது.
ஆனால், அலிசா ஹீலியின் அவுஸ்திரேலியாவை எதிர்கொள்ளும் முன், ஒரு புதிய எதிராளியை அவர்கள் எதிர்நோக்க நேரிடும் – அது மழையின் அச்சுறுத்தல்.
நவி மும்பையில் வானிலை நிலைமைகள் வாரம் முழுவதும் நிச்சயமற்றதாகவே உள்ளன.
அந்த நிலைமை இன்றும் தொடரும் என்று இந்திய வானிலை மையம் கூறுகின்றது.
வானிலை அறிவிப்புகளின்படி, காலையில் லேசான மழை பெய்யும் என்றும், பின்னர் பெரும்பாலான நாட்களில் அடர்த்தியான மேகமூட்டம் இருக்கும் என்றும் தெரிவிக்கின்றன.
பிற்பகலில் அது தெளிவடையும் என்று எதிர்பார்க்கப்பட்டாலும், அவ்வப்போது பெய்யும் மழை தூறல் போட்டிக்கு இடையூறு விளைவிக்கும் என்றும் கூறப்படுகிறது.
எனினும், 2025 மகளிர் உலகக் கிண்ணத்தில் அனைத்து நாக் அவுட் போட்டிகளுக்கும் ஐ.சி.சி ரிசர்வ் நாட்களை திட்டமிட்டுள்ளது.
எனவே, இன்று தொடர்ந்து மழை பெய்தால், ஆட்டம் மறுநாள், அதாவது நாளை மீண்டும் தொடங்கும்.
இருப்பினும், ரிசர்வ் நாளிலும் மழை பெய்தால், குழு கட்டத்தில் புள்ளிகள் பட்டியலில் முதலிடத்தைப் பிடித்ததன் மூலம் அவுஸ்திரேலியா இறுதிப் போட்டிக்கு முன்னேறும்.
அதாவது இந்தியாவின் உலகக் கிண்ண கனவு ஓட்டம் ஒரு பந்து கூட வீசப்படாமல் முடிவடையும்.





