தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் விசேட கலந்துரையாடல்!

தொழிற்சங்கங்களுக்கும் தொழில் அமைச்சின் செயலாளருக்கும், இடையில் இன்று தொழில் அமைச்சில் கலந்துரையாடல் ஒன்று மேற்கொள்ளப்பட்டது.

தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் வழங்க இருக்கும் 200 ரூபாய் கொடுப்பனவு குறித்தும் கம்பனிகள் வழங்க இருக்கும் 200 ரூபாய் சம்பள அதிகரிப்பு தொடர்பாகவும் தொழில் அமைச்சில் இந்த கலந்துரையாடல் ஏற்பாடு செய்யப்பட்டது.

இக்கலந்துரையாடலில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் உட்பட பல தொழிற்சங்க அமைப்புகள் கலந்துக் கொண்டன.

இதன் போது இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் தலைவர் செந்தில் தொண்டமான் கருத்து தெரிவிக்கையில்,

2026 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் தோட்ட தொழிலாளர்களுக்கு அரசாங்கம் அதிகரிக்க போவதாக கூறிய 200 ரூபாய் கொடுப்பனவும், கம்பனிகள் அதிகரிக்க போவதாக கூறிய 200 ரூபாய் சம்பள உயர்வும் வரவேற்கதக்கது என்று கூறினார்.

தற்போது தோட்ட தொழிலாளர்கள் மேற்கொள்ளும் வேலைக்கான அளவீடுக்கு தான் சம்பள அதிகரிப்பு இருக்க வேண்டுமே தவிர, கூடுதல் அளவீடுகளுக்கு சம்பள அதிகரிப்பை ஏற்றுக்கொள்ள முடியாது எனவும் செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

கம்பனிகள் புதிய சம்பளத்திற்கான வேலைக்கான அளவீடுகளை அதிகருக்குமானால் அதற்கு இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் ஒரு போதும் சம்மதிக்காது எனவும் அவர் தெரிவித்தார்.

தோட்ட பகுதிகளில் கொழுந்து நிறை பார்க்கும் பொழுது ஒரு நிறுவையின் போது 1 கிலோ வெட்டுவதற்கு தான் அனுமதி உள்ளது. ஆனால் அரசாங்கத்தால் வரவு செலவு திட்டம் அறிவித்த பின்னர் கம்பனிகள் பல தோட்ட பகுதிகளில் கொழுந்து நிறை பார்க்கும் பொழுது ஒரு நிருவைக்கு 3 முதல் 4 கிலோ வெட்ட ஆரம்பித்து விட்டனர்.

இதனால் கிட்டத்தட்ட ஒரு நாளைக்கு மூன்று நிருவையின் போது 9 kg முதல் 12 kg வரை ஒரு தொழிலாளிக்கு கொழுந்து வெட்டப்பட்டு வருகிறது.

பச்சை கொழுந்து விலை இன்று 200 ரூபாய் எனும் பொழுது தோட்ட தொழிலாளர்களிடம் இருந்து கிட்டத்தட்ட 1800 முதல் 2400 ரூபா வரை கம்பனிகள் சூறையாடி அதிலிருந்து 200 ரூபாய் வழங்குவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகின்றனர்.

எனவே கொழுந்து நிருவையில் கம்பனிகளால் வெட்டம்படும் நிறையை கம்பனிகள் உடனடியாக நிறுத்த வேண்டும் என தொழில் அமைச்சில் செந்தில் தொண்டமானால் இன்று முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

ஏற்கனவே கடந்த சம்பள உயர்வின் போது இவ்வாறான நடவடிக்கையை கம்பனிகள் முன்னெடுத்த நேரத்தில், இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் இதனை கடுமையாக எதிர்த்து ஹட்டன் தொழில் திணைக்களத்தில் பல ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்தது.

இவ்வாறான சட்டத்துக்கு புறம்பான நடவடிக்கையை கம்பனி மேற்கொள்ள கூடாது என தொழில் திணைக்களத்தால் எழுத்து மூலமாக கம்பனிக்கு அறிவிக்கப்பட்டது.

மீண்டும் இந்த வேலைத்திட்டத்தை கம்பனிகள் ஆரம்பித்து விட்டனர். எனவே கம்பனியின் இவ்வாறான நடவடிக்கையை தொழில் அமைச்சு உடனடியாக தலையிட்டு நிறுத்த வேண்டும் எனவும், தோட்ட தொழிலாளர்களின் சம்பள அதிகரிப்பு விடயத்தில் தோட்ட பகுதிகளில் கை காசுக்கு வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்களும், தொழிற்சாலைகளில் வேலை செய்யும் தொழிலாளர்களும், காலி, களுத்துறை ஆகிய பகுதிகளில் பாம் மர தோட்டத்தில் வேலை செய்யும் தோட்ட தொழிலாளர்களையும் இதில் உள்ளடக்க வேண்டும் என்ற கோரிக்கையையும் செந்தில் தொண்டமான் முன்வைத்தார்.

மேலும் தோட்ட தொழிலாளர்களின் சம்பளத்தில் 400 ரூபா அதிகரிக்க அரசாங்கத்தின் முன்மொழிவை இலங்கை தொழிலாளர் காங்கிரஸ் வரவேற்பதாக செந்தில் தொண்டமான் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *