இலங்கையைச் சேர்ந்த சமூக ஊடகங்களில் செல்வாக்கு மிக்க நபர் ஒருவர் பிரித்தானியா தொடர்பில் புலம்பெயர்ந்தோருக்கு எதிரான மற்றும் இஸ்லாமிய வெறுப்பு சார்ந்த தவறான தகவல்களைப் பதிவேற்றும் பேஸ்புக் பக்கங்களை நடத்தி 230,000 பவுண்ட்ஸ்களை சம்பாதித்ததாகக் கூறப்படுகிறது.
கீத் சூரியபுர என்ற இலங்கையரும் அவரது மாணவர்களும் 100க்கும் மேற்பட்ட பேஸ்புக் பக்கங்களில், தொழிலாளர் கட்சி இஸ்லாத்திற்குச் சொந்தமானது என்றும், லண்டனின் கவுன்சில் வீடுகள் முஸ்லிம்களுக்கு மட்டுமே அணுகக்கூடியவை என்றும் கூறுகின்றனர்.
கீத் சூரியபுர ஒரு கல்விக் கூடத்தை நடத்தி வருகிறார்.
இந்தக் கல்விக்கூடத்தில் இது போன்ற பேஸ்புக் பக்கங்களை எவ்வாறு அமைப்பது என்பதை ஏனையவர்களுக்கு கற்பிக்கப்படுகிறது.
பின்னர் கீத் சூரியபுர இந்தப் பக்கங்களில் உள்ள வீடியோக்களில் காட்டப்படும் விளம்பரங்களிலிருந்து பணம் சம்பாதிக்கிறார்.
மேலும், தனது ஆடம்பரமான வாழ்க்கை முறையை சமூக ஊடகங்களில் வெளிப்படுத்துகிறார்.
கீத் சூரியபுர மற்றும் அவரது மாணவர்கள் 1.6 மில்லியன் பயனர்களைக் கொண்ட 128 பேஸ்புக் பக்கங்கள் மற்றும் குழுக்களுடன் தொடர்புடையதாகக் கூறப்படுகிறது.
இது பிரித்தானியாவின் புலனாய்வு இதழியல் பணியகத்தின் விசாரணையில் கண்டறியப்பட்டுள்ளது.
தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில், சூரியபுர விலையுயர்ந்த கடிகாரங்களை அணிந்திருப்பதை காணொளிகள் மற்றும் புகைப்படங்களில் வெளிப்படுத்துகிறார்.
மேலும், ஐந்து நட்சத்திர உணவகங்களில் தானும் நண்பர்களும் சாப்பிடும் படங்களைப் பகிர்ந்து கொள்கிறார், நீச்சல் குளத்துடன் கூடிய சொகுசு குடியிருப்பில் இருக்கும் வீடியோக்களையும் வெளியிடுகிறார்.

அவரது சுயவிவரத்தில், அவர் ஒரு ‘Facebook monetisation expert’ என்றும், உலகம் முழுவதும் 2,500க்கும் மேற்பட்ட மாணவர்களுக்குப் பயிற்சி அளித்துள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.
மார்ச் மாதத்தில் அவரது பக்கங்களில் ஒன்று, லண்டன் மேயர் சர் சாதிக் கான் 40,000 கவுன்சில் வீடுகளைக் கட்டுவதாக உறுதியளித்ததாகவும், அவை முஸ்லிம்களுக்கு மட்டுமே கிடைக்கும் என்றும், அதனால் அவை ‘மசூதிகள் மற்றும் ஹலால் உணவுக் கடைகளுக்கு அருகில்’ இருக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டியது.
ஒரு பக்கம் எழுதுவதன் மூலம் மாதத்திற்கு £1,000க்கும் அதிகமாக சம்பாதித்ததாக சூரியபுர கூறுகிறார் – இது இலங்கையில் சுமார் மூன்று மாத சராசரி சம்பளத்திற்கு சமம்.
யூடியூப் பயிற்சி ஒன்றில், குடியேற்றம் போன்ற அரசியல் தலைப்புகளில் மாணவர்கள் அதிக ஈடுபாடு கொண்டிருப்பதால், பிரித்தானியாவை குறிவைக்குமாறு அவர் மாணவர்களுக்கு அறிவுறுத்துகிறார்.
பெரும்பாலும் பல எழுத்துப்பிழை மற்றும் இலக்கணப் பிழைகளைக் கொண்ட அவரது பேஸ்புக் பக்கங்கள், Together for Britain, Proper British Pride, and It’s Real British உள்ளிட்ட பெயர்களில் உள்ளன.
பிரித்தானிய பிரதமர் சர் கீர் ஸ்டார்மர் மற்றும் மேயர் சர் சாதிக் ஆகியோர் இராஜினாமா செய்ய வேண்டும் என்று அழைப்பு விடுக்கும் போலி செய்திக் குறிப்புகள் மற்றும் செயற்கை நுண்ணறிவால் (AI) உருவாக்கப்பட்ட படங்களையும் அவரது பேஸ்புக் பக்கத்தில் பலர் பகிர்ந்து கொள்கிறார்கள்.
இவ்வாறு பகிரப்பட்ட ஒரு போலி வீடியோவில் பிரதமர், தொழிலாளர் கட்சி நன்கொடையாளர் லார்ட் அல்லியை முத்தமிடுவதை சித்தரிக்கிறது.
எவ்வாறெனினும் அதிகாரிகளின் விசாரணையில் கீத் சூரியபுர, இந்த குற்றச்சாட்டுகள் தவறான புரிதல்களால் வந்தவை என்றும், போலியான தகவல் பிரச்சாரங்களை தான் நடத்தவில்லை என்றும் வலியுறுத்தியுள்ளார்.
அறிக்கையில் மேற்கோள் காட்டப்பட்டுள்ள குறிப்பிட்ட வலையமைப்பு குறித்து பேஸ்புக்கின் தாய் நிறுவனமான மெட்டா பகிரங்கமாக கருத்து தெரிவிக்கவில்லை.
இருப்பினும் ஒருங்கிணைந்த நம்பகத்தன்மையற்ற நடத்தையை கட்டுப்படுத்துவதாக தளம் முன்னர் உறுதியளித்துள்ளது.






