டித்வா சூறாவளியின் பேரழிவு விளைவுகளுக்கு மத்தியில், இந்தியப் பிரதமர் நரேந்திர மோடி, ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்கவுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு, ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் மேலும் ஆதரவை வழங்குவதாக உறுதியளித்தார்.
இந்த அழைப்பின் போது, நாட்டில் ஏற்பட்டுள்ள உயிர் இழப்புகளுக்கு அவர் தனது இரங்கலையும் பகிர்ந்து கொண்டார்.
இந்த அவசரமான நேரத்தில் இந்திய மக்கள் இலங்கை மக்களுடன் உறுதியான ஒற்றுமையுடனும் ஆதரவுடனும் நிற்கிறார்கள் என்றும் இந்தியப் பிரதமர் கூறினார்.

டித்வா சூறாவளி இலங்கை கரையைக் கடந்ததைத் தொடர்ந்து, இந்திய அரசு உடனடியாக கொழும்பில் உள்ள இரண்டு இந்திய கடற்படைக் கப்பல்களில் இருந்து 9.5 தொன் அவசரகால உணவுப் பொருட்களை விரைவாக வழங்கியது.
மேலும், 31.5 தொன் நிவாரணப் பொருட்களை மூன்று இந்திய விமானப்படை விமானங்கள் மூலமாக இலங்கைக் அனுப்பி வைத்தது.
இதில் தற்காலிக கூடாரங்கள், பாய்கள், போர்வைகள், சுகாதாரப் பொருட்கள், உலர் உணவுப் பொருட்கள், மருந்துகள் மற்றும் அறுவை சிகிச்சை உபகரணங்கள் என்பவையும் அடங்கும்.
அதேநேரம், மீட்புப் பணிகளில் உதவுவதற்காக இலங்கைக்கு ஐந்து பேர் கொண்ட மருத்துவக் குழுவையும், தேசிய பேரிடர் மீட்புப் படையின் (NDRF) 80 பேர் கொண்ட சிறப்பு நகர்ப்புற தேடல் மற்றும் மீட்பு (USAR) குழுக்களையும் அனுப்பியது.
மேலும், இந்திய கடற்படைக் கப்பலான சுகன்யாவில் (Sukanya) மேலும் 12 தொன் நிவாரணப் பொருட்களை அனுப்பியது.
இதுவரை, இந்தியா 53 தொன்களுக்கும் அதிகமான நிவாரணப் பொருட்களை வழங்கியுள்ளது.
திடீர் வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட சமூகங்களுக்கு உணவுப் பொருட்கள் மற்றும் மனிதாபிமான உதவிகளை ஏற்றிக்கொண்டு இரண்டு இந்திய விமானங்களும் சனிக்கிழமை கொழும்பை வந்தடைந்தன.
மேலும், இலங்கை விமானப்படையுடன் ஒருங்கிணைந்து, இந்திய கடற்படை கப்பலான விக்ராந்தின் சேத்தக் ஹெலிகொப்டர்கள் மற்றும் இந்திய விமானப்படையின் எம்ஐ-17 ஹெலிகொப்டர்கள் விரிவான மீட்பு நடவடிக்கைகளை மேற்கொண்டன.
இதன் மூலமாக கர்ப்பிணிப் பெண்கள், குழந்தைகள் மற்றும் படுகாயமடைந்தவர்கள் உட்பட சிக்கித் தவித்தவர்கள் விமானம் மூலம் மீட்கப்பட்டனர்.
ஞாயிற்றுக்கிழமை, இந்திய விமானப் படை ஹெலிகொப்டர்கள் படுகாயமடைந்த 6 பேர் மற்றும் 4 சிறுவர்கள் உட்பட 45 பேரை மீட்டு கொழும்புக்கு பாதுகாப்பாக கொண்டு சென்றன.
மீட்கப்பட்டவர்களில் 12 இந்தியர்கள், ஏராளமான வெளிநாட்டினர் மற்றும் உள்ளூர் இலங்கையர்கள் அடங்குவர்.
இதுவரை 150க்கும் மேற்பட்டோர் இந்திய படையினரால் பாதுகாப்பாக மீட்கப்பட்டுள்ளனர்.
இதனிடையே, இந்திய விமானப்படை 400க்கும் மேற்பட்ட இந்தியர்களை தாயகம் அழைத்து வர சிறப்பு விமானங்களை ஏற்பாடு செய்துள்ளது.
சுமார் 150 பயணிகள் C-130 விமானத்தில் டெல்லிக்கு அழைத்துச் செல்லப்பட்டனர், மேலும் 250 பேர் IL-76 விமானத்தில் திருவனந்தபுரத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டனர்.
ஆப்ரேஷன் சாகர் பந்துவின் கீழ் செயல்படும் இந்தியா, அதன் தொலைநோக்குப் பார்வையான மஹாசாகருக்கு இணங்கவும், ‘முதல் பதிலளிப்பவர்’ என்ற நிலையை நிலைநிறுத்தியும், இலங்கை பொது சேவைகளை மீண்டும் தொடங்கவும் வாழ்வாதாரத்தை மீட்டெடுக்கவும் பாடுபடுவதால், அதன் ஆதரவைத் தொடரும் இந்தியப் பிரதமர் மோடி, ஜனாதிபதி அநுரவிடம் தொலைபேசியில் உறுதியளித்துள்ளார்.
இதற்கு பதிலளித்த ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பேரழிவைத் தொடர்ந்து இந்தியாவின் உதவிக்கு தனது ஆழ்ந்த நன்றியைத் தெரிவித்தார்.
மேலும் மீட்புக் குழுக்கள் மற்றும் நிவாரண உபகரணங்களை விரைவாக அனுப்பியதற்கு இலங்கை மக்களின் சார்பில் பாராட்டுக்களை தெரிவித்தார்.
இலங்கை மீட்பு நடவடிக்கைகளை ஒருங்கிணைக்கும் போது, நெருங்கிய தொடர்பில் இருக்க இரு தலைவர்களும் ஒப்புக்கொண்டனர்.
இந்த விரைவான மனிதாபிமான நடவடிக்கைகள், இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் வளர்ச்சி, வர்த்தகம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பை உள்ளடக்கிய இரு நாடுகளுக்கும் இடையிலான நீண்டகால இராஜதந்திர உறவுகளை வலுப்படுத்துகிறது.
இந்த சூறாவளி இலங்கையில் பரவலான பேரழிவை ஏற்படுத்தியுள்ளதுடன் 390 நபர்களின் உயிர்களையும் காவு கொண்டுள்ளது.
அதேநேரம், 350க்கும் மேற்பட்டோர் காணாமல் போயுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.





