புயலால் பாதிக்கப்பட்ட இலங்கைக்கு இஸ்லாமாபாத்தில் இருந்து மனிதாபிமான உதவிகள் கொண்டு செல்வதை இந்தியா தொடர்ந்து தடுத்து வருவதாக பாகிஸ்தான் குற்றம் சாட்டியுள்ளது.
பாகிஸ்தானின் மனிதாபிமான உதவிகளை இலங்கைக்கு கொண்டு சென்ற சிறப்பு விமானம், இந்தியாவின் விமான அனுமதிக்காகக் காத்திருக்கும் நிலையில், 60 மணி நேரத்திற்கும் மேலாக தாமதத்தை எதிர்கொண்டதாக பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அலுவலகம் இன்று (02) வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்துள்ளது.
48 மணி நேரத்திற்குப் பின்னர் நேற்று இரவு இந்தியா வழங்கிய பகுதி விமான அனுமதி செயல்பாட்டு ரீதியாக நடைமுறைக்கு மாறானது.
ஏனெனில் இந்த ஒப்புதல் ஒரு சில மணிநேரங்களுக்கு மட்டுமே செல்லுபடியாகும் மற்றும் திரும்பும் கட்டத்திற்கான அனுமதியை அதில் சேர்க்கவில்லை.
இது இலங்கையின் சகோதர மக்களுக்கான இந்த அவசர நிவாரணப் பணியை இது கடுமையாகத் தடுக்கிறது – என்று கூறியுள்ளது.

திங்கட்கிழமை இரவு, வெள்ள நிவாரணம் வழங்குவதற்காக இலங்கைக்கு மனிதாபிமான உதவி விமானங்களுக்கு தனது வான்வெளியைப் பயன்படுத்த இந்தியாவிடமிருந்து பாகிஸ்தான் வெளிவிவகார அமைச்சு அலுவலகம் அனுமதி பெற்றது.
இந்திய வான்வெளி வழியாக மனிதாபிமான வான்வழிப் பறப்புகளை அனுமதிப்பதாக இந்திய உயர் ஸ்தானிகராலயம் எழுத்துப்பூர்வ உறுதிப்படுத்தலை அனுப்பியதாக பாகிஸ்தான் வெளிவிகார அமைச்சு அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
அந்த உறுதிபடுத்தலின்படி, விமானங்களுக்கு இன்று முதல் இலங்கைக்கான உதவிக்காக இந்திய வான்வெளியை பயன்படுத்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டித்வா சூறாவளியால் ஏற்பட்ட வெள்ளம் மற்றும் மண்சரிவுகளில் சிக்கித் தவிக்கும் மக்களைச் சென்றடைய இலங்கை அரசாங்கம் சர்வதேச உதவியைக் கோரியதுடன், இராணுவ ஹெலிகொப்டர்களையும் பயன்படுத்தியது.
பேரிடலில் குறைந்தது 410 பேர் உயிரிழந்துள்ளதுடன், 336 பேர் காணாமல் போயுள்ளதாக இலங்கையின் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் தெரிவித்துள்ளது.
2004 ஆம் ஆண்டு இந்தியப் பெருங்கடல் சுனாமிக்குப் பின்னர் நாட்டைத் தாக்கிய மிக மோசமான இயற்கை பேரழிவால் 1.5 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் நிலையம் சுட்டிக்காட்டியுள்ளது.
கடந்த ஏப்ரல் மாதத்தில் இரு நாடுகளுக்கும் இடையே பதட்டங்கள் அதிகரித்ததாலும், மே மாதத்தில் நான்கு நாள் மோதல் ஏற்பட்டதாலும், பாகிஸ்தானும் இந்தியாவும் தங்கள் வான்வெளிகளை பரஸ்பரம் விமானங்களுக்கு மூடியுள்ளன.
கடந்த ஒக்டோபரில், இஸ்லாமாபாத் இந்திய விமானங்களுக்கான வான்வெளி தடையை நவம்பர் 24 வரை நீட்டித்தமையும் குறிப்பிடத்தக்கது.





