முல்லைத்தீவு அனர்த்த முகாமைத்துவப்பிரிவு மற்றும் மின்சார சபையினரைச் சந்தித்த ரவிகரன் எம்.பி!

வன்னிமாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் துரைராசா ரவிகரன் இன்று (02.12.2025) முல்லைத்தீவு மாவட்ட அனர்த்த முகாமைத்துவப் பிரிவின் பிரதிப்பணிப்பாளர் எஸ்.கோகுல்ராஜை சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் இடம்பெற்றுள்ள அனர்த்த பாதிப்புக்கள் தொடர்பான விபரங்களைக் கேட்டறிந்துகொண்டதுடன், முல்லைத்தீவு மின்சாரசபைக்கும் சென்று மின்னிணைப்புப் பாதிப்புக்களைச் சீர்செய்யுமாறும் வலியுறுத்தியுள்ளார். 

மேலும் அனர்த்தப் பாதிப்புத் தொடர்பான விபரங்களை உரிய அமைச்சுகளின் கவனத்திற்கு கொண்டுசென்று அந்தப் பாதிப்புக்களைச் சீர்செய்வதற்கு தம்மால் நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுமெனவும் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் தெரிவித்துள்ளார். 

இதுதொடர்பில் நாடாளுமன்ற உறுப்பினர் ரவிகரன் மேலும் கருத்துத் தெரிவிக்கையில், 

முல்லைத்தீவு மாவட்டசெயலகத்தில் கடந்த 28.11.2025அன்று அனர்த்தம் தொடர்பான கூட்டமொன்று இடம்பெற்றது. இக்கூட்டத்தில் நானும் பங்கேற்றிருந்தேன். மேலும் குறித்த கூட்டத்தில் முல்லைத்தீவு மாவட்ட செயலாளர், அனர்த்த முகாமைத்துவப் பிரிவு, பிரதேசசெயலாளர்கள், பிரதேசசபை, கமநல அபிவிருத்தித் திணைக்களம், நீர்ப்பாசனத் திணைக்களம், வீதி அபிவிருத்தி அதிகாரசபை, வீதி அபிவிருத்தி திணைக்களம், படையினர், பொலிசார் உள்ளிட்ட தரப்பினரும் பங்கேற்றிருந்தனர். 

அக்கூட்டத்தில் அனர்த்தத்திலிருந்து மக்களைப் பாதுகாப்பது மற்றும் இடைத்தங்கல் முகாம்களில் தங்கியுள்ள மக்களின் அடிப்படைத் தேவைகளைப் பூர்த்திசெய்வது தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. 

பின்பு கொழும்பிற்கு சென்று பாராளுமன்றத்தில் உரிய அமைச்சுக்களைச் சந்தித்து அனர்த்த நிலமைகள் தொடர்பில் தெளிவுபடுத்தியதுடன், அனர்த்தப்பாதிப்புக்கள்தொடர்பிலும் உரிய அமைச்சுக்களின் கவனத்திற்குக் கொண்டுவந்திருந்தேன். 

இந்நிலையில் கொழும்பிலிருந்து வருகைதந்து அனர்த்த முகாமைத்துவ பிரிவினரை சந்தித்து அனர்த்தம் தொடர்பிலான விபரங்களைப் பெற்றுக்கொண்டேன். அந்தவகையில் அனர்த்தப் பாதிப்புக்கள் தொடர்பான விபரங்களை உரிய அமைச்சுகளுக்கும் கொண்டு சென்று அந்தப் பாதிப்புக்களை சீர்செய்வதற்கும் நடவடிக்கை எடுப்பேன்.

அத்தோடு மின்சார சபையினரையும் சந்தித்து முல்லைத்தீவு மாவட்டத்தில் மின்னிணைப்புக்கள் பாதிக்கப்பட்டுள்ள இடங்களை விரைவில் சீர்செய்யுமாறும் வலியுறுத்தியிருந்தேன். விரைவில் உரிய நடவடிக்கைகள் மேற்கொண்டு மின்னிணைப்புகள் சீர்செய்யப்படுமென மின்சாரசபையினராலும் தெரிவிக்கப்பட்டது. 

தொடர்ந்து முல்லைத்தீவு மாவட்டத்தில் அனர்த்தப்பாதிப்புக்களை எதிர்நோக்கியுள்ள மக்களையும் நேரடியாகச் சென்று பார்வையிடவுள்ளேன் – என்றார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *