இந்திய துணை உயர்ஸ்தானிகரை ரெலோ தலைவரும் வன்னி பாராளுமன்ற உறுப்பினருமான செல்வம் அடைக்கல நாதன் சந்தித்து இந்தியாவின் உதவிக்கு நன்றிகளை தெரிவித்துள்ளார்.
இதன்போது அக்காட்சியின் பேச்சாளர் சுரேந்திரனும் சந்திப்பில் கலந்து கொண்டார்.
நாட்டில் பாரிய அனர்த்தம் ஏற்பட்டுள்ள சூழ்நிலையில், அதி விரைவாக மீட்பு நடவடிக்கைகளிலும் நிவாரண வேலைகளிலும் இந்தியா முன்னின்று செயல்பட்டு வரும் நிலையில் இந்திய அரசாங்கத்திற்கும் மக்களுக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது.
இது தொடர்பில் செல்வம் அடைக்கலநாதன் கருத்து தெரிவிக்கையில்,
எக்கால கட்டத்திலும் இலங்கையில் ஏற்படுகின்ற அனர்த்த சூழ்நிலையில் இந்தியா முன்னின்று மீட்பு நடவடிக்கைகளில் செயல்பட்டு வருகிறது.
நாடு பாரிய பொருளாதார சிக்கல்களை எதிர்கொண்டிருந்த வேளையிலும் இந்தியாவே முன்னின்று இலங்கைக்கான உதவிகளை செய்தது.
அதேபோன்று இன்று எதிர்பாராத பாரிய அனர்த்தத்தை இந்த நாடு எதிர்கொண்டுள்ள வேளையில் உடனடியாக இந்தியா அதிதீவிர மீட்பு மற்றும் நிவாரண வேலைகளில் முன்னின்று செயல்படுகிறது.
எமது அயல் நாடாக இந்தியா எப்பொழுதும் அக்கறையுடன் செயல்பட்டு வருவதற்கு நன்றி தெரிவித்ததோடு பாதிக்கப்பட்ட மக்கள் சார்ந்து மேலதிக கோரிக்கைகளும் முன்வைக்கப்பட்டது.
வைத்தியசாலைகளில் மருந்து வகைகளுக்கும் குழந்தைகளுக்கான பால்மா போன்றவற்றிற்கும் பாரிய தட்டுப்பாடு நிலவுவது சுட்டிக்காட்டப்பட்டது.
உடனடி நிவாரண பணிகள் முன்னெடுக்கப்படுவது மிகவும் அவசியம்.
அதேவேளை வெள்ள அனர்த்தத்தால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டுக்கு கீழ்ப்பட்ட மக்களினுடைய வாழ்வாதாரத்தை உடனடியாக கட்டி எழுப்ப வேண்டிய தேவையையும் எடுத்துக் கூறிய ரெலோ தரப்பினர், விவசாயிகள் பயிர்களை இழந்தும் மீனவர்கள் வலைகளை பறிகொடுத்தும் சிறு முயற்சியாளர்கள் கால்நடைகள் கோழி வளர்ப்பு உட்பட பல முயற்சியாளர்கள் பாதிக்கப்பட்டுள்ளமையும் சுட்டிக்காட்டியதோடு அடுத்த கட்டமாக வாழ்வாதாரத்தை மீட்கின்ற உதவி திட்டங்கள் உடனடியாக செயல்படுத்த வேண்டிய அவசியத்தையும் வலியுறுத்தினர்.
ஏற்கனவே இந்தியாவின் உதவிக்கரம் மீட்பு மற்றும் நிவாரண பணிகளிள் துரித கதியில் செயல்படுவதற்கு நன்றி தெரிவிக்கும் அதேவேளையில் பாதிக்கப்பட்டவர்களுடைய வாழ்வாதார மீட்புப் பணிகளும் அடுத்த கட்ட அவசரமான விடயமாக இந்தியா கருத்தில் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டது.





