சீரற்ற வானிலை காரணமாக, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் மாவட்டத்தில் உள்ள அனைத்து பிரதேச செயலாளர் பிரிவுகளில் பாதிக்கப்பட்ட குடும்பங்களின் எண்ணிக்கை மேலும் அதிகரித்துள்ளதாக புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார்.
இன்று மாலை வரையிலான கணக்கெடுப்பின்படி, புத்தளம் மாவட்டத்தில் 16 பிரதேச செயலாளர் பிரிவுகளில் 548 கிராம சேவகர் பிரிவுகள் காணப்படுகின்ற போதிலும், 432 கிராம சேவகர் பிரிவுகளில் 73313 குடும்பங்களைச் சேர்ந்த 271206 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் அவர் கூறினார்.
புத்தளம் பிரதேச செயலகப் பிரிவிலேயே அதிக குடும்பங்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், அங்கு 21 கிராம சேவகர் பிரிவுகளில் 18219 குடும்பங்களைச் சேர்ந்த 69005 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
மேலும், மாதம்பை பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 38 கிராம சேவகர் பிரிவுகளில் 1778 குடும்பங்களைச் சேர்ந்த 5925 பேரும், மஹாவெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 43 கிராம சேவகர் பிரிவுகளில் 3671 குடும்பங்களைச் சேர்ந்த 13310 பேரும்,
ஆராச்சிக்கட்டுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 14 கிராம சேவகர் பிரிவுகளில் 8923 குடும்பங்களைச் சேர்ந்த 31200 பேரும், வென்னப்புவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 33 கிராம சேவகர் பிரிவுகளில் 1652 குடும்பங்களைச் சேர்ந்த 6092 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
வன்னாத்தவில்லு பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 17 கிராம சேவகர் பிரிவுகளில் 923 குடும்பங்களைச் சேர்ந்த 7445 பேரும், சிலாபம் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 45 கிராம சேவகர் பிரிவுகளில் 12100 குடும்பங்களைச் சேர்ந்த 49500 பேரும், கற்பிட்டி பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 27 கிராம சேவகர் பிரிவுகளில் 8743 குடும்பங்களைச் சேர்ந்த 28813 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆனமடுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 20 கிராம சேவகர் பிரிவுகளில் 339 குடும்பங்களைச் சேர்ந்த 1126 பேரும், நவகத்தேகம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 19 கிராம சேவகர் பிரிவுகளில் 307 குடும்பங்களைச் சேர்ந்த 995 பேரும், தங்கொட்டுவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 38 கிராம சேவகர் பிரிவுகளில் 1838 குடும்பங்களைச் சேர்ந்த 5589 பேரும், மஹாகும்புக்கடவல பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 21 கிராம சேவகர் பிரிவுகளில் 242 குடும்பங்களைச் சேர்ந்த 760 பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
கருவலகஸ்வெவ பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 20 கிராம சேவகர் பிரிவுகளில் 1060 குடும்பங்களைச் சேர்ந்த 2962 பேரும், முந்தல் பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 31 கிராம சேவகர் பிரிவுகளில் 7268 குடும்பங்களைச் சேர்ந்த 27834 பேரும், பல்லம பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 6 கிராம சேவகர் பிரிவுகளில் 450 குடும்பங்களைச் சேர்ந்த 1650 பேரும், நாத்தாண்டிய பிரதேச செயலகத்திற்கு உட்பட்ட 39 கிராம சேவகர் பிரிவுகளில் 5800 குடும்பங்களைச் சேர்ந்த 19000 பேரும் பாதிக்கப்பட்டுள்ளதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் வை.ஐ.எம்.சில்வா கூறினார்.
இதேவேளை, புத்தளம் மாவட்டத்தில் வெள்ள அனர்த்தத்தினால் 27 பேர் உயிரிழந்துள்ளதுடன், 8 பேர் காணாமல் போயுள்ளனர் எனவும் அவர் குறிப்பிட்டார்.
அத்துடன், 44 வீடுகள் வெள்ளத்தில் முழுமையாக சேதமடைந்துள்ளதுடன், 735 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்துள்ளதாகவும் அவர் கூறினார்.
மேலும், வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மக்களை பாதுகாப்பாக தங்க வைப்பதற்காக புத்தளம் மாவட்டத்தில் 142 தற்காலிக முகாம்கள் அமைக்கப்பட்டுள்ளதுடன், அங்கு 10558 குடும்பங்களைச் சேர்ந்த 40821 பேர் தங்க வைக்கப்பட்டுள்ளனர் எனவும் அவர் சொன்னார்.
இவ்வாறு தற்காலிக முகாம்களில் தங்க வைக்கப்பட்டிருக்கும் மக்களுக்கு தேவையான சமைத்த உணவு, குடிநீர் மற்றும் வைத்திய சேவைகள் என்பன முப்படையினர் மற்றும் அரச திணைக்கள ஊழியர்களின் ஒத்துழைப்புடன் அந்தந்த பிரதேச செயலாளர்கள் தலைமையில் முன்னெடுக்கப்படுவதாகவும் புத்தளம் மாவட்ட செயலாளர் மேலும் வை.ஐ.எம்.சில்வா தெரிவித்தார்.









