தலவாக்கலை – வட்டகொடை உள்ளிட்ட பகுதிகளில் தொடர்ச்சியாக ஏற்பட்ட கனமழை மற்றும் மண்சரிவு காரணமாக மக்கள் பெரிதும் பாதிக்கப்பட்ட நிலையில், பெருந்தோட்ட மற்றும் சமூக உட்கட்டமைப்பு பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் இன்று (03) அப்பகுதிகளில் கள விஜயம் மேற்கொண்டு நிலைமைகளை ஆய்வு செய்தார்.
ஹட்டன் TVTC தொழிற்பயிற்சி நிலையத்திற்குச் சென்ற பிரதி அமைச்சர், அங்குள்ள மாணவர்களை சந்தித்து அவர்களது குடும்பங்கள் அனர்த்தத்தால் எதிர்நோக்கும் நிலைமைகள் குறித்து விரிவாக கேட்டறிந்தார்.
மாணவர்களின் குடும்பத்தினருக்கான அவசர நிவாரணங்கள் தாமதமின்றி வழங்கப்படுவதற்கான வழிமுறைகள் உடனடியாக ஏற்பாடு செய்யப்பட்டதாகவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
மாணவர்கள் எதிர்நோக்கும் கல்வி மற்றும் தொழில்நுட்ப சவால்கள் குறித்து பிரதி அமைச்சர் உரிய அதிகாரிகளுடன் அங்கு இருந்தபோதே தொலைபேசியில் கலந்துரையாடி உடனடி தீர்வுகளை அறிவுறுத்தினார்.
அதனுடன், கற்கைநெறி விருத்தி, தரநிலைகள் உயர்த்தல் மற்றும் மாணவர் உள்ளீர்ப்பு அதிகரிப்பு தொடர்பான விவகாரங்களும் அதிகாரிகளுடன் ஆராயப்பட்டன.
பின்னர் தலவாக்கலை–வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டப்பகுதிக்குச் செல்லும் வழியில் சமீபத்தில் ஏற்பட்ட மண்சரிவு பாதிப்புகளும் பிரிதி அமைச்சர் பிரதீப் அவர்களால் நேரில் பார்வையிடப்பட்டன.
மண்சரிவால் பாதிக்கப்பட்ட இடங்களில் மண் அகற்றும் பணிகள், வீதிகள் மறுசீரமைப்பு மற்றும் மக்களுக்கு பாதுகாப்பான பயண வசதிகளை வழங்கும் நடவடிக்கைகள் தொடர்பிலும் அதிகாரிகளுக்கு வழிகாட்டல் வழங்கப்பட்டது.
அதனைத் தொடர்ந்து வட்டகொடை யொக்ஸ்போர்ட் தோட்டம் மற்றும் மடகும்புர தெற்கு தோட்டப் பகுதிகளில் ஏற்பட்ட அனர்த்தத்தால் தற்காலிக பாதுகாப்பு நிலையங்களில் தங்க வைக்கப்பட்டுள்ள குடும்பங்களை பிரதி அமைச்சர் சந்தித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களின் அத்தியாவசிய தேவைகள் உணவு, நீர், உடைகள், குழந்தைகளுக்கான பராமரிப்பு பொருட்கள் மற்றும் சுகாதார வசதிகள் உடனடியாக வழங்கப்படுவதற்கான நடவடிக்கைகள் வேகமாக முன்னெடுக்கப்படுவதாக உறுதியளித்தார்.
பாதிக்கப்பட்ட மக்களுடன் உரையாடிய பிரதி அமைச்சர்,
அனர்த்தத்தில் சிக்கிய ஒவ்வொருவரின் பாதுகாப்பும் நலனும் எங்களின் முதன்மை.
அரசாங்கம் அனைத்து நிறுவனங்களையும் இணைத்து ஒருமித்த முறையில் நிவாரண நடவடிக்கைகளை செயற்படுத்துகிறது. யாரும் புறக்கணிக்கப்பட மாட்டார்கள், என தெரிவித்தார்.
தலவாக்கலை–வட்டகொடை பகுதி மக்கள் எதிர்நோக்கும் உடனடி சிக்கல்கள் மற்றும் எதிர்காலத்தில் இத்தகைய அனர்த்தங்களைத் தவிர்க்க வேண்டிய நீண்டகால நடவடிக்கைகள் தொடர்பாகவும் பிரதி அமைச்சர் அதிகாரிகளுடன் கலந்துரையாடினார்.
இந்த கள விஜயத்தின் போது, பிரதி அமைச்சருடன், கொட்டகலை பிரதேச சபையின் பிரதி தவிசாளர் யாகுலமேரி, கொட்டகலை பிரதேச சபை உறுப்பினர் சுதர்சன், அகரபத்தனை பிரதேச சபை உறுப்பினர்களான கவிஷான், மற்றும் பிரபு, தேசிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நிறைவேற்றுக்குழு உறுப்பினர் றொஹான், பிரதி அமைச்சரின் ஒருங்கிணைப்பு செயலாளர்களான வசந்தமூர்த்தி மற்றும் சிவநேசன் ஆகியோர் உடனிருந்தனர்.





