கிளிநொச்சி மாவட்டத்தின் கரைச்சி பிரதேச செயலர் பிரிவில் வெள்ள அனர்த்தத்தினால் பெரிதும் பாதிக்கப்பட்ட சாந்தபுரம் கிராமத்துக்கு மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன் உள்ளிட்ட குழுவினர் கள விஜயமொன்றை இன்றைய தினம் மேற்கொண்டிருந்தனர்.
டித்வா புயலால் ஏற்பட்ட வெள்ள அனர்த்தால் பாதிக்கப்பட்ட் மக்களுக்கு மேற்கொள்ளப்பட வேண்டிய அவசர நடவடிக்கைகள்,அடிப்படைச் வசதிகளை உறுதி செய்தல் மற்றும் தமது வீட்டு சுற்றுப்புறச் சூழலைப் பாதுகாத்தல் மற்றும் தொற்றுநோய் தொடர்பாகவும் உள்ளிட்ட நடவடிக்கைகள் தொடர்பில் ஆராய்ந்தனர்.
குறிப்பாக கிணறுகளில் வெள்ள நீர் நிரம்பியுள்ளதால் பொதுவான ஓர் இடத்தில் குடிநீர் வசதியினை ஏற்படுத்திக் கொடுப்பதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.
அத்துடன் கிணறுகளை குளோரின் இட்டு தூய்மைப்படுத்தும் பணியும் பரவலாக முன்னெடுக்கப்பட்டது.
இதன்போது எதிர்காலங்களில் வெள்ள அனர்த்தம் ஏற்படாமலிருக்க இங்குள்ள பிரதான வீதியில் மேலதிகமாக மதகுகளை அமைக்க வேண்டும் என்ற கோரிக்கையினை இக்கிராம மக்கள் முன் வைத்திருந்தனர். வீதி அபிவிருத்தி திணைக்களம் ஊடாக அதனை சீர் செய்யும் நடவடிக்கைகள் குறித்து ஆராயப்பட்டது.
இக்களவிஜயத்தில் கிளிநொச்சி மாவட்ட அரச அதிபர் எஸ்.முரளிதரன், கரைச்சி பிரதேச செயலாளர் த. முகுந்தன், கிளிநொச்சி மாவட்ட அனர்த்த முகாமைத்துவ உதவி பணிப்பாளர் A.M.R.N.K அழககோன், கிளிநொச்சி மாவட்ட பிராந்திய பதில் சுகாதார சேவைகள் பணிப்பாளர் மருத்துவர் எஸ்.பேரலாதன், கிளிநொச்சி 55ம் படைப் பிரிவின் கட்டளை தளபதி மேஜர் ஜெனரல் WMAB விஜயகோன் உள்ளிட்ட இராணுவ அதிகாரிகள், கரைச்சி உதவி திட்டாமல் பணிப்பாளர் ராஜ்வினோத், மாவட்ட ஒருங்கிணைப்பு குழு தலைவரின் இணைப்புச் செயலாளர் மோகன், கிராம மட்ட உத்தியோகத்தர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.



