450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான சலுகைப் பொதியொன்றை இலங்கைக்கு வழங்கியுள்ளதாக இந்திய அரசாங்கம் இன்று அறிவித்துள்ளது. இலங்கைக்கு வருகை தந்திருந்த இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர், ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க, பிரதமர் மற்றும் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் மற்றும் சஜித் பிரேமதாச மற்றும் தமிழ் அரசியல் பிரதிநிதிகள் உள்ளிட்டவர்களை இன்று சந்தித்து கலந்துரையாடினார்
இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு பேச்சுவார்த்தைகளின் போது அபிவிருத்தி திட்டங்கள் தொடர்பாக ஆராயப்பட்டிருந்தது.
குறிப்பாக பொருளாதாரம் சுற்றுலாத்துறை சுகாதாரம் வலுசக்தி ஆகிய துறைகளில் இருநாடுகளுக்கிடையிலான ஒத்துழைப்புக்கள் குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
அத்துடன் இந்த நெருக்கடியான சந்தர்ப்பத்தில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கு இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க இலங்கை மக்கள் சார்பபாக நன்றி தெரிவித்துள்ளார்.

இதேவேளை ஜனாதிபதியுடன் இடம்பெற்ற சந்திப்பிற்கு பின்னர் வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத்தையும் சந்தித்து கலந்துரையாடியிருந்ததுடன் விசேட ஊடகசந்திப்பிலும் கலந்து கொண்டிருந்தார்.
அத்துடன் இந்திய பிரதமர் நரேந்திர மோடியின் சிறப்புத் தூதுவராக கலந்து கொண்டிருந்த எஸ்.ஜெய்சங்கர், வடக்கு மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் புனரமைக்கப்பட்ட பெய்லி பாலத்தினையும் மெய்நிகர் மூலம் திறந்து வைத்திருந்தார்.

இதனை தொடர்ந்து டித்வா புயலினால் ஏற்பட்ட அழிவுகளில் இருந்து மீள இலங்கையை கட்டியெழுப்புவதற்காக மேலும் 450 மில்லியன்
அமெரிக்க டொலர் பெறுமதியான மீள் கட்டமைப்புக்கான உதவிகளை இந்தியா வழங்கியுள்ளதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் இதன்போது அறிவித்தார்.
இதனை உறுதி செய்யும் இந்திய பிரதமர் மோடியின் கடிதத்தையும் ஜனாதிபதியிடம் இன்று இந்திய வெளிவிவகார அமைச்சர் கையளித்திருந்தார்.

இதன்போது 2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்ததைப் போலவே இதிலிருந்து மீண்டு வரும் என இந்தியா உறுதியாக இருப்பதாக இந்திய வெளிவிவகார அமைச்சர் எஸ்.ஜெய்சங்கர் தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர்
“450 மில்லியன் அமெரிக்க டொலர் பெறுமதியான உதவிகளில் 350 மில்லியன் அமெரிக்க டொலர் சலுகை அடிப்படையிலான
கடன் திட்டமாக அமைந்துள்ளது. மேலும் 100 மில்லியன் அமெரிக்க டொலரினை நன்கொடையாக இலங்கைக்கு வழங்கப்படும். இதற்கான மோடியின் கடிதத்தையும் ஒப்படைத்துள்ளேன்.
பேரிடரால் பாதிப்புக்குள்ளான வீதிகள், புகையிரதப் பாதைகள் மற்றும் பாலங்களை மீளமைத்தல் மற்றும் புனரமைத்தல், முழுமையாக அழிவடைந்த மற்றும் சேதமடைந்த வீடுகளை மீண்டும் கட்டியெழுப்புதல், சுகாதாரம், கல்வி மற்றும் விவசாயத் துறைகளின் மறுசீரமைப்பு இதில் அடங்குகின்றன. பேரிடரை எதிர்கொள்ளுதல் மற்றும் அதற்கான தயார்நிலைத் திட்டங்களை மேம்படுத்தவும் நாம் தயாராகவுள்ளோம்.
இந்த உதவி இலங்கை அரசாங்கத்துடன் நெருக்கமான ஆலோசனைகளின் அடிப்படையில் வழங்கப்பட்டுள்ளது.
சூறாவளி கரையைக் கடந்த நாளில் இருந்து, ஆபரேஷன் சாகர் பந்து திட்டத்தை நாம் உடனடியாக ஆரம்பித்திருந்தோம்.
இந்திய விமானப்படையின் உதயை மிகவும் பயனுள்ளதாக அமைந்தது. மேலும் அவசர சிகிச்சை பிரிவுகளையும் நாம் இலங்கைக்கு விமானம் மூலம் கொண்டு வந்திருந்தோம்.
கிளிநொச்சியில் பெய்லி பாலம் கட்டுவதற்கும், சிலாபத்தில் மற்றொரு பாலம் கட்டுவதற்கும் இந்தியா உதவியது. இந்தியாவிலிருந்து சுற்றுலாவை மேம்படுத்துதல் மற்றும் இலங்கையின் பொருளாதாரத்தை வலுப்படுத்த வெளிநாட்டு நேரடி முதலீட்டை ஊக்குவித்தல் உட்பட இலங்கையின் மீட்சிக்கு இந்தியாவின் பரந்த ஆதரவை நிச்சயமாக வழங்கும். இலங்கைக்கு இது மிகவும் கடினமான காலகட்டம் என்பதை நாங்கள் முழுமையாக அங்கீகரிக்கின்றோம்.
2022ஆம் ஆண்டு பொருளாதார நெருக்கடியிலிருந்து இலங்கை மீண்டு வந்ததைப் போலவே, இந்த இயற்கை பேரழிவுகளால் ஏற்பட்ட புதிய சிரமங்களில் இருந்து இலங்கை மீண்டு வரும். குறிப்பாக கடந்த காலத்தில் இலங்கையின் வலுவான உறுதியையும் வலிமையையும் கடந்து வந்த பாதையையும் நாம் கண்டிருக்கின்றோம்.
இந்தியா முன்னெப்போதையும் விடவும் தற்போது இலங்கையுடன் உறுதியாக நிற்கிறது என்பதை நான் உங்களுக்கு உறுதியளிக்கிறேன், மேலும் இந்த துன்பத்திலிருந்து மீள்வதில் இலங்கை மீண்டும் அதன் பெரும் மீள்தன்மையை நிரூபிக்கும் என்று நான் நம்புகிறேன் என தெரிவித்தார்.
இதன்போது கருத்து தெரிவித்த வெளிவிவகார அமைச்சர் விஜித ஹேரத் பொருளாதார சவால்களுக்கு மத்தியில் முன்னேறிவரும் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவினை எதிர்ப்பார்க்கின்றோம் என்று தெரிவித்தார். தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர் “டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட எமது நாட்டு மக்களையும் நாட்டை மீண்டும் கட்டியெழுப்புவதற்கு இந்தியா முன்னின்று செயற்பட்டது. எனவே முதலில் இந்தியா வழங்கிய அனைத்து ஒத்துழைப்புக்களுக்கும் நன்றி தெரிவித்துக்கொள்கின்றோம்.
குறிப்பாக இந்திய பிரதமர் நரேந்திர மோடிக்கு இலங்கை மக்கள் சார்பாக நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம். பொருhளாதார சவால்களுக்கு மத்தியில் முன்னோக்கி செல்லும் இலங்கைக்கு இந்தியாவின் தொடர்ச்சியான ஆதரவினை நாம் எதிர்ப்பார்க்கின்றோம்.
இலங்கை இந்திய நட்புறவை தொடர்ந்தும் வலுப்படுத்துவதே எமது நோக்கமாகும். கடன் மறுசீரமைப்பு விடயத்தில் இந்தியா வழங்கிய ஒத்துழைப்புக்களுக்கும் எமது நன்றிகள் தெரிவிக்கின்றோம் என்று தெரிவித்தார்.

இந்திய வெளிவிவகார அமைச்சர் ஜெய்சங்கர் பிரதமரை சந்தித்தார்
இதேவேளை பிரதமர் ஹரிணி அமரசூரியாவையும் அலரி மாளிகையில் இன்று சந்தித்து கலந்துரையாடியிருந்தார்.
இலங்கையின் மறுகட்டமைப்பு முயற்சிகளை இந்தியா முன்னெடுத்துள்ள நிலையில் இலங்கையின் உயர்மட்டத் தலைவர்களுடன் கலந்துரையாடுவதை நோக்கமாகக்
கொண்ட அதிகாரப்பூர்வ பயணத்தின் ஒரு பகுதியாக இந்த சந்திப்பு இடம்பெற்றதாக பிரதமரின் ஊடகப்பிரிவு குறிப்பிட்டுள்ளது.
இரு தரப்பிலும் முன்னெடுக்கப்பட்டு வரும் நிவாரண முயற்சிகளை மதிப்பாய்வு செய்வது தொடர்பாகவும் ஆராயப்பட்டிருந்தது.
டிட்வா புயலால் ஏற்பட்ட பேரழிவைத் தொடர்ந்து மீட்புப் பணியில் உடனடி நிவாரண முயற்சிகளுக்கு அப்பால், மீள்குடியேற்றம், குடியிருப்பு மற்றும் உள்கட்டமைப்பு மறுகட்டமைப்பு போன்ற நீண்டகால நடவடிக்கைகள் அடங்கும் என்று குறிப்பிட்ட பிரதமர், இந்திய அரசின் தொடர்ச்சியான ஆதரவைப்
பாராட்டியிருந்தார். நாட்டை இயல்பு நிலைக்கு கொண்டு வருவதன் ஓர் அங்கமாகவே பாடசாலைகளை மீண்டும் திறப்பதற்கு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டுள்ளதாகவும், அவை உன்னிப்பாகக் கண்காணிக்கப்பட்டு வருவதாகவும் பிரதமர் மேலும் தெரிவித்தார்.
இதில் இலங்கைக்கான இந்திய உயர் ஸ்தானிகர் சந்தோஷ் ஜா உள்ளிட்ட இருநாடுகளின் பிரதிநிதிகளும் கலந்து கொண்டிருந்தனர்.

எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச இந்திய வெளியுறவு அமைச்சரை சந்தித்தார்.
இதேவேளை நாட்டின் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச, இந்திய வெளிவிவகார அமைச்சரை இன்றையதினம் சந்தித்து கலந்துரையாடியுள்ளார். கொழும்பில் உள்ள இந்திய உயர்ஸ்தானிகராலயத்தில் இந்த சந்திப்பு இடம்பெற்றிருந்தது.
நாட்டிற்கு 100 மில்லியன் அமெரிக்க டாலரை மானியமாக 350 மில்லியன் அமெரிக்க டொலர் குறைந்த வட்டி சலுகைக் கடனாக வழங்கியதற்காக இந்திய பிரதமர் நரேந்திர மோடி மற்றும் இந்திய வெளியுறவு அமைச்சர் மற்றும் இந்திய அரசு உட்பட முழு இந்திய மக்களுக்கும் சஜித் நன்றி தெரிவித்துள்ளார்.

இந்திய அரசாங்கத்தால் வழங்கப்படும் உதவிகள் மக்களால் மிகவும் வெளிப்படைத்தன்மையுடன் பெறப்பட வேண்டும் என்றும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சுட்டிக்காட்டினார்,
மேலும் எதிர்க்கட்சியும் அதற்கான அதிகபட்ச பங்களிப்பை வழங்கும் என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
எனவே, இலங்கைக்கு தொடர்ந்து ஆதரவை வழங்குமாறு இந்திய வெளிவிவகார அமைச்சரிடம் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இதேவேளை வடக்கு கிழக்கு மற்றும் மலையகம் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளையும் இந்திய வெளிவிவகார அமைச்சர் சந்தித்து கலந்துரையாடடியுள்ளார்.

இலங்கை தமிழரசுக்கட்சி, ஜனநாய தமிழ் தேசியக்கூட்டணி, உள்ளிட்ட தரப்பினரும் மலையகம் சார்பாக தமிழ் முற்போக்குகூட்டணி இலங்கை தொழிலாளர் காங்கிஸ் உள்ளிட்டவர்கள் கட்சிகளின் தலைவர்கள் இதில் கலந்து கொண்டிருந்தனர்.





