கண்டி மாவட்டச் செயலக வளாகத்தில் வாகனமொன்றில் பொருத்தப்பட்ட குண்டு வெடிக்கவுள்ளதாக விடுக்கப்பட்ட மிரட்டலை தொடர்ந்து இன்று காலை பொலிஸார் மற்றும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினர் வரவழைக்கப்பட்டு தீவிர தேடுதல் நடவடிக்கையை முன்னெடுக்கப்பட்டிருந்தது.
கண்டி மாவட்டச் செயலகத்தின் உத்தியோகபூர்வ மின்னஞ்சல் முகவரிக்கு அனுப்பட்டிருந்த தகவலலுடாக இந்த மிரட்டல் விடுக்கப்பட்டிருந்தது.
கண்டி மாவட்டச் செயலாளர் உடனடியாக பொலிசாருக்கு வழங்கிய தகவலின் அடிப்படையில் இந்த அவசரச் சோதனை முன்னெடுக்கப்பட்டது.

இன்று காலை 10.00 மணியளவில் பொலிஸ் மோப்ப நாய்களின் உதவியுடன் இந்தச் சோதனை நடவடிக்கைகள் இடம்பெற்றிருந்தன.
வெடிகுண்டு செயலிழப்பு பிரிவினர் வருகை தந்ததைத் தொடர்ந்து, மாவட்ட செயலகத்தின் பிரதான நுழைவாயில் முழுமையாக மூடப்பட்டது.
இதனால் சேவைகளைப் பெற்றுக்கொள்வதற்காக வந்திருந்த பொதுமக்கள் உள்ளே செல்லவோ அல்லது வெளியேறவோ முடியாமல் பல மணிநேரம் பாரிய சிரமத்திற்குள்ளாகினர்.
சோதனையின் ஒரு பகுதியாக, வாகனங்களில் வந்திருந்த அதிகாரிகள் மற்றும் ஊழியர்கள் அனைவரும் உடனடியாகத் தத்தமது வாகனங்களுக்கு அருகில் வருமாறு பொலிசார் அறிவுறுத்தியிருந்தனர்.
அத்துடன் எவ்வித அசம்பாவிதங்களும் நிகழாத வண்ணம் தீவிர பாதுகாப்புச் சோதனைகள் தொடர்ந்தும் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.





