புதுவருடத்தில் பாதுகாப்பு மையத்தில் தங்கியுள்ளமக்களை சந்தித்த ஜனாதிபதி!

அங்கும்புர மற்றும் கன்கொட்டுவ பகுதிகளில் மண்சரிவு காரணமாக வீடுகளை இழந்த மக்களுக்கான மீள்குடியேற்ற ஏற்பாடுகள் குறித்து ஜனாதிபதி கேட்டறிந்தார்

ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க கண்டி, பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையில் அமைக்கப்பட்டுள்ள பாதுகாப்பு மையத்திற்கு இன்று (01) பிற்பகல் சென்று அந்த மக்களிடம் நலன் விசாரித்தார்.

அண்மையில் ஏற்பட்ட அனர்த்தத்தைத் தொடர்ந்து, அங்கும்புர, கன்கொட்டுவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் 06 வீடுகள் முழுமையாகவும், 15 வீடுகள் பகுதியளவிலும் சேதமடைந்ததுடன், அதிக ஆபத்துள்ள வலயமாக அடையாளம் காணப்பட்ட அந்தப் பகுதியில் 30 வீடுகளில் வசிப்பவர்கள் வெளியேற்றப்பட்டனர்.

அதன்படி, கடந்த நவம்பர் 28 ஆம் திகதி ஸ்ரீ சுதர்ஷனாராமய விகாரையில் அமைக்கப்பட்ட பாதுகாப்பு மையத்தில் 47 குடும்பங்களைச் சேர்ந்த சுமார் 189 பேர் தற்காலிகமாக தங்கியிருந்ததுடன், 07 குடும்பங்களைச் சேர்ந்த 23 பேர் மாத்திரம் தற்போதும் தங்கியுள்ளனர்.

அந்த மக்களுடன் சுமூகமான உரையாடலில் ஈடுபட்ட ஜனாதிபதி, அவர்களின் தகவல்களைக் கேட்டறிந்ததுடன், நலன்புரி மற்றும் மீள்குடியேற்ற நடவடிக்கைகள் குறித்தும் விசாரித்தார்.

பூஜாபிட்டிய, வெல்கால ஸ்ரீ சுதர்சனராமய விகாரையின் விகாராதிபதி வண,பம்பரகஹகந்தே ஞானசிறி தேரர் மற்றும் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் பிரதி அமைச்சர் பிரசன்ன குணசேன, பாராளுமன்ற உறுப்பினர் தனுர திஸாநாயக்க, பூஜாபிட்டிய பிரதேச சபையின் தவிசாளர் சஞ்சீவ எதிரிசிங்க, பிரதேச செயலாளர் ஷானிகா தீகல ஆகியோரும் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *