யாழ்ப்பாணம், கச்சதீவு புனித அந்தோனியார் திருத்தலத்தின் 2026-ஆம் ஆண்டுக்கான வருடாந்தத் திருவிழா எதிர்வரும் பெப்ரவரி மாதம் 27 மற்றும் 28-ஆம் திகதிகளில் நடைபெறவுள்ளது.
இதற்கான ஆரம்பகட்ட முன்னாயத்தக் கூட்டம் இன்று (06) நெடுந்தீவு பிரதேச செயலகத்தில் நடைபெற்றது.
நெடுந்தீவு பிரதேச செயலர் என். பிரபாகரன் தலைமையில் நடைபெற்ற இந்தக் கலந்துரையாடலில், நெடுந்தீவு கடற்படை கட்டளை அதிகாரி மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்கள் கலந்துகொண்டனர்.
இதேவேளை, கடந்த ஆண்டு திருவிழாவின் போது பக்தர்களுக்கு ஏற்பட்ட அசௌகரியங்கள் மற்றும் இனங்காணப்பட்ட குறைபாடுகளை இம்முறை நிவர்த்தி செய்வது குறித்து விரிவாக ஆராயப்பட்டது.
அத்துடன் இம் மாத (ஜனவரி) நடுப்பகுதியில், துறைசார் அதிகாரிகளுடன் பிரதேச செயலர் கச்சதீவிற்கு நேரடி பயணத்தை மேற்கொண்டு அங்குள்ள அடிப்படை வசதிகளை ஆய்வு செய்யவுள்ளார்.
கள பயணத்தைத் தொடர்ந்து, யாழ். மாவட்டச் செயலர் தலைமையில் ஒருங்கிணைப்புக் கூட்டம் நடத்தப்பட்டு, ஒவ்வொரு திணைக்களத்திற்குமான பணிப்பொறுப்புகள் அதிகாரப்பூர்வமாகப் பகிர்ந்தளிக்கப்படும்.
இந்திய மற்றும் இலங்கை பக்தர்களின் வசதிக்காக அரச மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒன்றிணைந்து வினைத்திறனுடன் பணியாற்ற வேண்டும் எனப் பிரதேச செயலர் அழைப்பு விடுத்தார்.
ஒவ்வொரு ஆண்டும் மார்ச் மாத தொடக்கத்தில் நடைபெறும் இத்திருவிழா, இம்முறை பெப்ரவரி இறுதி வாரத்தில் (27, 28) நடைபெறவுள்ளது.
இந்தியாவிலிருந்து குறிப்பாகத் தமிழக மீனவர்கள் மற்றும் பக்தர்கள் அதிகளவில் வருகை தருவார்கள் என்பதால், பாதுகாப்பு மற்றும் படகுச் சேவைகள் குறித்த மேலதிக அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.






