இலங்கை ஆயுதப்படைகளில் சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் பேரில், இதுவரை 60 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
பத்தரமுல்லையில் அமைந்துள்ள கொரோனா பரவலை தடுப்பதற்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் அமர்வு கடந்த 15 ஆம் திகதி பிற்பகல் நடைபெற்றது.
பாதுகாப்பு பதவி நிலை பிரதானியும் இராணுவ தளபதியும் கொரோனா பரவல் தடுப்புக்கான தேசிய செயல்பாட்டு மையத்தின் தலைவருமான ஜெனரல் சவேந்திர சில்வா மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன ஆகியோர் தலைமையில் நடைபெற்றது.
இதன்போது தேசிய தடுப்பூசி ஏற்றல் செயற்றிட்டம், நாளாந்தம் தொற்று உறுதி செய்யப்பட்டவர்களின் எண்ணிக்கை 1400-1500 வரையில் காணப்படுகின்றமை, இறப்பு வீதம் 35 – 40 வீதமாக காணப்படுகின்றமை, ஒரு சில கிராம சேவகர் பிரிவுகள் மட்டும் தனிமைப்படுத்தப்பட்டுள்ளமை, மன்னாரை மையப்படுத்திய தடுப்பூசி வழங்கும் திட்டம் என்பன குறித்து ஜெனரல் சவேந்திர சில்வா விளக்கமளித்தார்.
இவ்விடயம் தொடர்பில் அவர் தெரிவிக்கையில்,
ஓகஸ்ட் மாத இறுதிக்குள் முதற் தொகுதி தடுப்பூசி வழங்கும் செயற்றிட்டத்தை நிறைவு செய்ய எதிர்பார்த்திருப்பதோடு, ஏற்றுமதி ஊக்குவிப்பு சபையின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள ஆடைத் தொழிற்சாலை ஊழியர்களுக்கு தடுப்பூசி வழங்கும் செயற்பாடுகளை முன்னெடுத்து வரும் அதேவேளை தேசிய கல்வியற் கல்லூரி, ஆசிரியர்கள், 30 மேற்பட்ட பொதுமக்களுக்கு தடுப்பூசிகளை வழங்கும் வேலைத்திட்டத்தையும் இராணுவம் முன்னெடுத்து வருகிறது.
நாங்கள் தேசிய தடுப்பூசி செயற்பாட்டிற்காக அர்ப்பணித்துள்ளோம்.
ஆனால் எங்கள் ஆயுதப்படைகளில் சுமார் 1 இலட்சத்து 80 ஆயிரம் பேரில், இதுவரை 60 ஆயிரம் பேர் மட்டுமே தடுப்பூசி பெற்றுள்ளனர்.
இருப்பினும் தங்களது உயிர் அச்சுறுத்தல்களை பொருட்படுத்தாமல், நோயாளர்களை காவிச் செல்லும் இயந்திரங்களை இராணுவ வீரர்கள் தள்ளிச் செல்கிறார்கள்.
எங்கள் இராணுவ வீரர்களால் இதுவரை 1 ஆயிரத்து 1 கொரோனா நோயாளிகளின் பூதவுடல்கள் அடக்கம் செய்யப்பட்டுள்ளது.
அதனையடுத்து வெளிநாடுகளில் இருந்து அழைத்து வரப்படுவோர் மற்றும் தனிமைப்படுத்தல் நடவடிக்கை பற்றிய புதிய போக்குகள் தொடர்பிலும் அவர் விளக்கமளித்தார்.
மேற்படி இரு தரப்பினருக்கும் மேற்கொள்ளப்படுகின்ற பீசிஆர் பரிசோதனைகளின் முடிவுகள் 24 மணித்தியாலங்களுக்குள் கிடைக்கப்பெறும் எனவும் இராணுவ தளபதி தெரிவித்தார்.
சுகாதார சேவைகளின் பணிப்பாளர் நாயகம் விஷேட வைத்திய நிபுணர் அசேல குணவர்தன, தலைமை தொற்று நோயியல் நிபுணர் சமித கினிகே ஆகியோரால் தொழில்நுட்ப ரீதியான தரவுகளும் வழங்கப்பட்டன.