யாழ்ப்பாணம் – வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து விலகுவதாக கோணலிங்கம் கருணானந்தராசா, தமிழ் அரசுக் கட்சியின் பொதுச் செயலாளர் உள்ளிட்டோருக்கு கடிதம் ஊடாக அறிவித்துள்ளார்.
வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து வரும் ஜூலை 31 ஆம் திகதியுடன் விலகுவதாக அவர் கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.
கடந்த உள்ளூராட்சித் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் தமிழ் அரசுக் கட்சியில் போட்டியிட்டு வெற்றி பெற்ற அவர் அந்தக் கட்சியின் நகர சபைத் தலைவராக தெரிவு செய்யப்பட்டார்.
இந்நிலையில் தமிழ் தேசியக் கட்சியை எம்.கே. சிவாஜிலிங்கம் உள்ளிட்டோர் ஆரம்பித்த நிலையில் அவர்களுடன் இணைந்து செயற்படுவதால் தமிழ் அரசுக் கட்சி அவரை வல்வெட்டித்துறை நகர சபையின் தலைவர் பதவியிலிருந்து நீக்க முயற்சித்தது.
எனினும் அது பின்னர் கைவிடப்பட்டது.
அந்நிலையில் தொடர்ந்தும் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் சார்பில் நகர சபைத் தலைவராகத் தொடர விரும்பாத காரணத்தினால் பதவி விலகுகின்றேன் என கோணலிங்கம் கருணானந்தராசா தெரிவித்துள்ளார்.
அவர் தனது பதவி விலகல் கடிதத்தை வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளருக்கும் அனுப்பிவைத்துள்ளார்.