கொரோனா சடலங்கள் வட்டமடு பிரதேசத்தில் நல்லடக்கமா?

கொரோனாவினால் உயிரிழந்த உடல்களை கிண்ணியா பிரதேச செயலக பிரிவுக்கு உட்பட்ட வட்டமடு பிரதேசத்தில் நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

குறித்த செயற்றிட்டத்திற்கு தடையாக இருந்த காரணங்களைக் கண்டறிந்து தற்போது சீர் செய்யப்பட்டு அங்கு நல்லடக்கம் செய்வதற்கான முயற்சிகள் துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருவதாக அமைச்சர் மஹிந்தானவின் இணைப்புச் செயலாளரும் யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினருமான வசீர் முக்தார் தெரிவித்தார்.

ஜனாஸா நல்லடக்கத்திற்காக கிண்ணியா பிரதேச செயலகப் பிரிவில் வட்டமடு பிரதேசத்தில் 9.9 ஏக்கர் அரச காணி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது

இந்த குறித்த இடத்தில் நல்லடக்கம் செய்வதற்கென இலங்கை இராணுவம் மற்றும் தொழில்நுட்பக் குழுவினரின் அனுமதி பெறப்பட்டுள்ளது.

எனினும் இது தொடர்பில் உத்தியோகபூர்வமாக சுகாதார அமைச்சின் அனுமதியை பெற்றுக்கொள்வதில் தாமதம் கண்டறியப்பட்டு உடனுடக்குடன் அமைச்சர் அலி சப்ரியுடன் தொடர்பினை ஏற்படுத்தி இது பற்றி அவருடைய ககவனத்தில் கொண்டு செல்லப்பட்டு சுகாதார அமைச்சின் பிரதிப் பணிப்பாளர் மற்றும் இந்த செயற் திட்டத்திற்கு பொறுப்பாக இயங்கும் இராணுவ அதிகாரி கேர்ணல் ரவீந்திர ஜயசிங்க , மாவட்ட செயலாளர் பிரதேச செயலாளர், ஆகியோருக்கு இடையிலான ஓர் ஒருங்கிணைப்பினை உடனடியாக ஏற்படுத்தி இதில் காணப்பட்ட சில தடைகளை நிவர்த்தி செய்து நல்லடக்கம் செய்வதற்கான நடவடிக்கைளை துரிதமாக மேற்கொள்ள இந்த சந்தர்ப்பம் வழிவகுத்துள்ளது.

அதேவேளையில் கிண்ணியா பிரதேச சபை தவிசாளரின் வேண்டுகோளுக்கு இணங்க மையவாடி நிலம், அதற்கு செல்லும் பாதை மற்றும் ஏனைய அபிவிருத்திகளுக்காக 45 இலட்சம் ரூபா நிதி செலவாகும் என மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டத்தை மேற்கொள்ள நிதி உதவி அவசியம் என்று இங்கு விஜயம் செய்த குழுவினரிடம் தவிசாளர் வேண்டுகோள் விடுத்தார்.

இந்த நிதியினை தற்போது திரட்டும் நடவடிக்கையில் நாங்கள் ஈடுபட்டுள்ளோம் என யட்டிநுவர பிரதேச சபை உறுப்பினருமான வசீர் முக்தார் தெரிவித்தார்.

இதற்கான கணிசமானவு நிதி தற்போது சேகரிக்கப்பட்டு விட்டது. அதனை விரைவில் ஒப்படைக்கத் தயாராக உள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *