அனைத்துவகை தடுப்பூசிகளை வழங்குங்கள்-ஜனாதிபதியிடம் விடுக்கப்பட்ட கோரிக்கை

வடகிழக்கு மக்களின் எதிர்பார்புக்களின் அடிப்படையில் அனைத்துவகை தடுப்பூசிகளையும் வழங்குமாறு முன்னாள் மாகாணசபை உறுப்பினர் செ.மயூரன் ஜனாதிபதிக்கு கடிதம் அனுப்பியுள்ளார்.

குறித்த கடிதத்தில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

வடகிழக்கு பகுதிகளில் வசிக்கும் மக்களின் நன்மை கருதி அனைத்துவகை கொரோனா தொற்று தடுப்பூசிகளையும் இந்தப்பிராந்தியத்திற்கு வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறேன்.

மேலும் குறிப்பாக வடகிழக்கில் வசிக்கும் மக்கள் அல்லது இளைஞர்களில் அனேகமானவர்கள் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளுடன் தொடர்புகளை பேணுபவர்களாக உள்ளனர்.

மேலும் குறிப்பாக தொழில் நோக்கத்திற்காகவோ அல்லது பல்வேறு காரணங்களிற்காகவோ வெளிநாடுகளிற்கு செல்லும் நோக்கம் அவர்களிடம் இருக்கின்றது. நாட்டின் தலைவர் என்றவகையில் அதனை நீங்கள் நன்கு அறிந்திருப்பீர்கள் என நம்புகின்றேன்.

இந்நிலையில் ஐரோப்பா உள்ளிட்ட மேற்கத்தேய நாடுகளிற்கு செல்லும் இலங்கையை சேர்ந்த பயணிகள் பைசர், அஸ்ராசெனேகா, மொடேர்னா போன்ற கொரோனா தடுப்பூசிகளின் இரண்டு செலுத்துகைகளையும் பெற்றிருக்க வேண்டும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

ஆயினும் வடகிழக்கு பகுதியில் இதுவரையான காலப்பகுதியில் சீனா நாட்டினால் வழங்கப்பட்ட சினோபார்ம் தடுப்பூசிகளே அதிகம் ஏற்றப்பட்டு வருகின்றது.

இதனால் வெளிநாடு செல்லும் நோக்கத்துடன் இருக்கும் அனேகமான பொதுமக்கள் சீனநாட்டு தடுப்பூசிகளை செலுத்திக்கொள்ளாத அபாய நிலமை ஏற்பட்டுள்ளது. இது தொடரும் பட்சத்தில் கொரோனா தொற்றுப்பரவலடைந்து, உயிரிழப்புக்களும் மென்மேலும் அதிகரிக்கும் அபாயநிலமை காணப்படுகின்றது.

வெளிநாடு செல்லும் பயணிகள் கொழும்பில் தமக்கு தேவையான தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ள முடியும் என்று அரசாங்கம் அறிவித்திருந்தாலும் தற்போதைய நெருக்கடியான காலப்பகுதி மற்றும் மேல்மாகாணத்தில் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வரும் முடக்கல் நடவடிக்கைகளால் அனேகமான பொதுமக்கள் அங்கு சென்று தடுப்பூசிகளை பெற்றுக்கொள்வதில் பல்வேறு அசௌகரியங்களை சந்திக்கின்றனர்.

எனவே இதனை கருத்தில் கொண்டு நாட்டின் தலைவர் என்ற வகையில் வடகிழக்கு பிராந்தியத்திற்கு பைசர்,அஸ்றாசெனேகா(கொவிசீல்ட்), ஸ்புட்னிக் போன்ற கொரோனா தடுப்பூசிகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவிலேனும் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு மக்களின் பிரதிநிதி என்றவகையில் கேட்டுக்கொள்கின்றேன் என்றுள்ளது

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *