நாட்டை திறப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை எடுக்க அரசாங்கம் முன்னுரிமை வழங்கியுள்ளதுடன், உரிய பொருளாதார முகாமைத்துவத்தின் ஊடாக மக்களுக்கு நிவாரணம் வழங்குவதற்கும் நடவடிக்கை எடுத்துள்ளதாக நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ தெரிவித்தார்.
உள்ளூராட்சி மன்றங்களின் தலைவர்களுடன் நேற்று (17) முற்பகல் அலரி மாளிகையில் நடைபெற்ற கலந்துரையாடலின் போதே அமைச்சர் இதனை தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்,
நாடு சில தடவைகள் முடக்கப்பட்டமையால், உள்நாட்டிலும் வெளிநாடுகளிலும் இருந்து அரசாங்கத்திற்கு நிதி கிடைக்கும் வழிகளில் தடங்கல் ஏற்பட்டுள்ளது.
அரசாங்கத்திற்கும், மக்களுக்கும் பணம் கிடைக்கும் முறைமையை நடைமுறைப்படுத்துவதற்கு கூடிய விரைவில் நாடு திறக்கப்பட வேண்டும்.
யுத்தம் நிலவிய காலப்பகுதியில் நாட்டில் 1.2 பில்லியன் டொலர் கையிருப்பு காணப்பட்டது.
தற்போது 4 பில்லியனாகக் காணப்படும் கையிருப்பை முகாமைத்துவம் செய்வதன் மூலம், பொருளாதார நெருக்கடியை தீர்க்க முடியும்.
டொலரின் பெறுமதி அதிகரிப்பது தொடர்பில் பொய் பிரசாரங்கள் முன்னெடுக்கப்படுவதாகவும், இந்த நிலைமையை எதிர்கொள்வதற்கு தயார் எனவும் நிதி அமைச்சர் பசில் ராஜபக்ஷ மேலும் குறிப்பிட்டார்.