
நாடாளுமன்ற உறுப்பினர் சம்பிக்க ரணவக்க ஐக்கிய மக்கள் சக்தியின் முக்கிய பதவியொன்றுக்கு நியமிக்கப்படவுள்ளதாக எதிர்பார்க்கப்பட்டபோதும் அவர் எந்தவிதமான பதவிகளுக்கும் நியமிக்கப்படாத நிலைமைகள் தொடர்ந்ததன் காரணத்தினால் தனது தன்னிச்சையான செயற்பாடு மூலமாக 43ஆவது படையணி என்ற அமைப்பினை உருவாகினார்.
இந்த நிலையில் அவரை ஐக்கிய மக்கள் சக்திக்குள் கொண்டுவருவதற்கு பங்காளி கட்சியின் தலைவரான மனோகணேசன் சஜித் பிரேமதாசவுடன் பேச்சுவார்த்தைகளை முன்னெடுத்திருந்தார்.
அதுமட்டுமன்றி சஜித் பிரேமதசவும் ரஞ்சித் மத்தும பண்டார தலைமையிலான குழுவொன்றை சம்பிக்க ரணவக்கவுடன் பேச்சுக்களை நடத்துவதற்கு நியமித்திருந்தார்.
எவ்வாறாயினும் தற்போது வரையில் சஜித், சம்பிக்க இடையில் முழுமையான புரிதல் ஏற்பட்டிருக்கவில்லை. எனினும் சம்பிக்க ரணவக்க தான் சஜித் பிரேமதாசவின் தலைமையை ஏற்றுக்கொண்டுள்ளதாகவும் வேறு எதனையும் எதிர்பார்க்கவில்லை என்றும் கூறிவருகின்றார்.
ஆனாலும், தனது 43ஆவது படையணியை அவர் பலப்படுத்தும் செயற்பாடுகளை தொடர்ச்சியாக முன்னெடுத்து வந்துகொண்டே இருந்தார். இந்த நிலையில் தற்போது அவர் 43ஆவது படையணியை மையப்படுத்தி நாடாளவிய ரீதியில் நூறுக்கும் மேற்பட்ட கூட்டங்களை நடத்தவுள்ளார்.
இதன் முதலாவது கூட்டம் கடந்த 15ஆம் திகதி மொனராகலையில் நடைபெற்றுள்ளது. இதன் தொடர்ச்சியாக அடுத்த கூட்டங்கள் இடம்பெறவுள்ளதோடு அரசாங்கத்திற்கு எதிராக செயற்படும் பல்வேறு தரப்பக்களையும் அந்தந்த பகுதிகளில் தனது மேடையில் பிரசன்னமாக்குவதற்கும் சம்பிக்க திட்டமிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.