தமிழ் மக்களின் தேசிய பிரச்சனைகளிற்கான நிரந்தர தீர்வு திட்டத்தை முன்வைக்காத பட்சத்தில் எதிர்க்கட்சிகளின் கூட்டணி முயற்சியில் தமிழ் தேசிய கூட்டமைப்பு பங்குபற்றுவதில் அர்த்தமிருக்காது என்ற செய்தியை எதிர்க்கட்சிகளிற்கு அழுத்தம் திருத்தமாக தமிழ் தேசிய கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
எதிர்க்கட்சிகளிற்கிடையிலான கூட்டணியை உருவாக்கும் முயற்சியாக இன்று கொழும்பு, ஜானகி ஹொட்டலில் சந்திப்பொன்று நடந்தது.
கரு ஜயசூரியவின் ஏற்பாட்டில் இந்த சந்திப்பு நடந்தது.
Advertisement
சஜித் பிரேமதாச, மாவை சேனாதிராசா, மனோ கணேசன், பழநி திகாம்பரம், ஐ.தே.க, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், முஸ்லிம் காங்கிரஸ் சார்பிலான பிரதிநிதிகள் இந்த சந்திப்பில் கலந்து கொண்டனர்.
விலைவாசி உயர்வு, பொருளாதார பிரச்சனை, ஜனநாயக மறுப்பு உள்ளிட்ட 4 விடயங்களை அடிப்படையாக கொண்டு எதிரணிகள் ஓரணியாக செயற்பட வேண்டுமென கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
மறைந்த சோபித தேரரின் ஏற்பாட்டிலான கூட்டணியை போல இது உருவாக்கப்பட வேண்டுமென கூறப்பட்டது.
தமிழ் தேசிய கூட்டமைப்பு சார்பில், மேற்குறிப்பிட்ட 4 பிரச்சனைகள் சார்பில் ஓரணியில் செயற்படுவதில் ஆட்சேபணையில்லை. ஆனால், அதைவிட தமிழ் மக்களிற்கு இனப்பிரச்சனை முதன்மையானது. சோபித தேரரின் ஒற்றுமை முயற்சியில், இனப்பிரச்சனை தொடர்பான அவர்களது நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியிருந்தனர். அதேபோல, இந்த கூட்டணியில் நாம் செயற்படுவதெனில், இனப்பிரச்சனை தொடர்பாகவும் கவனம் செலுத்த வேண்டும். அது குறித்த நிலைப்பாட்டை தெளிவுபடுத்த வேண்டும். அப்படியென்றாலே இந்த கூட்டணியில் இணைந்து செயலாற்ற முடியுமென தெரிவிக்கப்பட்டுள்ளது.






