ஹொரவ்பொத்தானை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கல்கந்தாவ பகுதியில் மூன்று பிள்ளைகளின் தாயொருவர் தூக்கில் தொங்கிய நிலையில் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இச்சம்பவம் இன்று ஞாயிற்றுக்கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இவ்வாறு மீட்கப்பட்டவர் ஹொரவ்பொத்தானை-கரடிக்குளம்,கல்கந்தாவ பகுதியைச் சேர்ந்த மூன்று பிள்ளைகளின் தாயாரான ஹனீபா நுஸ்ரினா (24வயது) எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.
மேலும் இச் சம்பவம் குறித்து தெரியவருவதாவது:
குறித்த பெண் குருநாகல் பகுதியைச் சேர்ந்த ஒருவரை திருமணம் முடித்து தமது சொந்த ஊரான கல்கந்தாவ பகுதியில் வசித்து வந்ததாகவும் கடந்த சில நாட்களாக குடும்பத்தகராறு ஏற்பட்டுள்ளதாகவும் ஆரம்பகட்ட விசாரணை மூலம் தெரியவந்துள்ளது.
குறித்த பெண்ணின் சடலம் தற்போது சம்பவ இடத்தில் இருப்பதாகவும் விசாரணைகளை மேற்கொண்டு வருவதாகவும் பிரேத பரிசோதனைக்காக அனுராதபுரம் போதனா வைத்தியசாலைக்கு அனுப்பி வைக்கப்பட உள்ளதாகவும் ஹொரவ்பொத்தானை பொலிஸார் தெரிவித்தனர்.