டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து யுவதி மாயம்: தேடும் பணி தொடர்ந்து முன்னெடுப்பு

திம்புளை – பத்தனை டெவோன் நீர்வீழ்ச்சியில் தவறி விழுந்து காணாமல் போயுள்ள யுவதியை தேடும் பணி தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருவதாக எமது பிராந்திய செய்தியாளர் தெரிவித்துள்ளார்.

தலவாக்கலை- லிந்துலை லென்தோமஸ் தோட்ட பகுதியைச் சேர்ந்த 19 வயதான மணி பவித்ரா என்ற யுவதியே குறித்த சம்பவத்தில் உயிரிழந்துள்ளார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) மாலை, நீர்வீழ்ச்சியை பார்வையிட சென்ற 4 பெண்களில் ஒருவரே, இவ்வாறு நீர் வீழ்ச்சியில் தவறி விழுந்துள்ளதாக திம்புளை– பத்தனை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

மேலும் நீர்வீழ்ச்சியின் உச்சிக்கு கால் கழுவ சென்ற யுவதி ஒருவரே, இவ்வாறு கால் வழுக்கி நீர் வீழ்ச்சியில் விழுந்துள்ளதாக பொலிஸாரின் ஆரம்பக்கட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

இந்நிலையில் நேற்று மாலை முதல் இராணுவத்தினர், பொலிஸார் மற்றும் விமான படையினர் ஆகியோர்  இணைந்து, காணாமல் போயுள்ள யுவதியை  தேடும் நடவடிக்கையை தொடர்ந்து முன்னெடுத்து வருகின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக திம்புளை– பத்தனை பொலிஸார் மேலதிக விசாரணையை முன்னெடுத்து வருகின்றனர்.

Leave a Reply