இந்தியா திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத்தமிழர்கள் தமது விடுதலையை வலியுறுத்தி கடந்த 11.08.2021 முதல் உண்ணாவிரத போராட்டங்களை பல வழிமுறைகளில் முன்னெடுத்து வருகின்றனர்.
அதன்படி, 27 வது நாள் தொடர்ச்சியாக இன்று திங்கட்கிழமையும் அமைதிவழிப் போராட்டம் ஒன்றை முன்னெடுத்துள்ளனர்.
குறித்த போராட்டத்தில் அவர்கள் கருத்து தெரிவிக்கையில்,
முதலமைச்சர் ஐயாவுக்கு திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்களின் அன்பும் பாசமும் நிறைந்த வணக்கங்கள்!
திருச்சி மத்திய சிறை வளாகத்தில் உள்ள சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழ் சொந்தங்களை விசாரணை கைதிகள் என்ற பெயரில் பன்னெடுங்காலமாக அடைத்து வைத்திருப்பதும், அவர்கள் வழக்கை முடித்தால் மட்டுமே வெளியில் செல்ல முடியும் என்ற நிலையில் அவர்கள் செய்யாத குற்றத்தினை ஒத்துக் கொள்ளும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளனர்.
இல்லை என்றால் வழக்கை முடிக்க பல ஆண்டுகள் ஆகும். இவர்களுக்கு விடுதலை கிடைக்கும் வரை தங்களது குடும்பத்தை பிரிந்து இருக்கும் சூழ்நிலைக்கு தள்ளப்பட்டுள்ளோம்.
எங்கள் குழந்தைகள் இம் மண் தொட்ட காலம் இழந்தோம்! மழலை கொஞ்சி பேசிய காலம் இழந்தோம். மடல் எடுத்துப் படித்த காலம் இழந்தோம்.இனி இழக்க எதுவும் இன்றி, இருக்கும் அவர்களை இழக்க நேரிடுமோ என பயம் தோன்றுகிறது.
எங்களின் வாழ்க்கை நிமிடங்கள் எம்மை கடந்து போகிறது என்பதையும் எங்களின் கவலைகள் துன்பங்கள் முதலியவற்றையும் இன்று 27வது நாளாக பதாகைகள் மூலம் வெளிப்படுத்துகின்றோம்.
இவ்வாறான கோரிக்கைகளை திருச்சி சிறப்பு முகாமில் உள்ள ஈழத் தமிழர்கள் முன்வைத்து போராடிவருகின்றமை குறிப்பிடத்தக்கது.