காரைக்காலில் உயிருடன் விடப்படும் நாக பாம்புகள் – மக்கள் அச்சம்!

இணுவில் காரைக்கால் சிவன் கோயிலை அண்மித்த பகுதிகளில் வசிக்கும் மக்கள் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருவதாக நல்லூர் பிரதேச சபை உறுப்பினர் சி.கௌசல்யா தெரிவித்துள்ளார்.

இந்த விடயம் தொடர்பாக மேலும் தெரிவித்துள்ள அவர், “சிலரின் வீடுகள் மற்றும் விவசாய காணிகளுக்குள் வரும் நாக பாம்பு உள்ளிட்ட விஷ ஜந்துக்களை உயிருடன் பிடித்து சிவன் கோயிலை அண்மித்த பகுதிகளில் விட்டுச் செல்கின்றனர்.

இந்துக்கள் மத்தியில் நாக வழிபாட்டு முறை உள்ளமையால், நாக பாம்பை அடித்துக்கொல்வதற்கு பலருக்கும் தயக்கம். அதனால் அதனை உயிருடன் பிடித்து வந்து ஆலய சூழலில் விட்டுச் செல்கின்றனர்.

புராதன ஆலயமான காரைக்கால் சிவன் கோயிலை சுற்றி பல பாம்பு புற்றுகள் உள்ளன. அந்த புற்றுக்களுக்குள் தற்போது நாக பாம்பு உள்ளிட்ட பல பாம்புகள் குடி கொண்டுள்ளன.

இந்நிலையில் அவை தற்போது, ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் உள்ள வீடுகளுக்குள்ளும் விவசாய காணிகளுக்குள்ளும் படையெடுக்கின்றன. அதனால் அப்பகுதி மக்கள் பாம்புகளின் அச்சுறுத்தல்களுக்கு மத்தியில் வாழ்ந்து வருகின்றனர்.

இது தொடர்பில் நல்லூர் பிரதேச சபையின் கவனத்திற்கு கொண்டு சென்றதை அடுத்து, வனவிலங்கு பாதுகாப்பு துறையின் உதவியை பெற்றுள்ளோம்.

அதன் மூலம் ஆலய சூழலில் நாக பாம்புகள் உள்ளிட்ட பாம்புகள், விஷ ஜந்துக்களை கண்ணுற்றால் சமூக பொறுப்புடன் 0779507269 எனும் தொலைபேசி இலக்கத்திற்கு தொடர்புகொண்டு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்.

அதேவேளை ஆலயத்தை அண்மித்த பகுதிகளில் பாம்புகள் உள்ளிட்ட விஷ ஜந்துக்களை கொண்டுவந்து உயிருடன் விடுவதனை தடை செய்வதற்கான நடவடிக்கைகளை முன்னெடுத்து வருகிறேன்” என தெரிவித்தார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *