மாலைதீவில் ஒரு தீவை உருவாக்குவதற்காக கிழக்கு மாகாணத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் மணல் எடுத்து வருவதாக, மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கம் பகீர் தகவலொன்றை வெளியிட்டுள்ளார்.
நாடாளுமன்றத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை (7) உரையாற்றும் போதே இதனை அவர் தெரிவித்தார்.
மேலும் அவர் தெரிவிக்கையில்,
மாலைத்தீவிற்கு கடத்தப்படுகின்ற மணல் தொடர்பிலான மோசடியில் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் அமைச்சர் ஒருவர் ஈடுபட்டுள்ளதாகவும், மொட்டுக் கட்சியின் எம்.பி.க்களால் மணல் ஏற்றப்படுவதாகவும் அவர் குற்றம் சாட்டியுள்ளார்.
இத்தகைய செயற்பாட்டின் மூலம் நாடு வருவாயினை பெற்றுக்கொண்டால் இந்த நடவடிக்கை ஒரு பிரச்சினையாக இருக்காது. ஆனால் இதன் மூலம் கிடைக்கும் வருவாய் நாட்டிற்கு போகாது என்பதை நான் நன்கு அறிவேன்.
மேலும் நாட்டின் ஆளுநர்கள் இன்று வேலை செய்வது சட்டத்தை மதிக்காமலே எனவும் சாணக்கியன் தெரிவித்தார்.
அத்துடன், இந்த பிரச்சினையை தீர்க்க சபாநாயகரிடம் கோரிக்கை விடுத்துள்ளார்.
இந்த நிகழ்வில் பேசிய அரசாங்கத்தின் தலைமைச் செயலாளர் ஜான்ஸ்டன் பெர்னாண்டோ, அந்த கேள்விக்கு பதிலளிக்க சம்பந்தப்பட்ட அமைச்சருக்கு அறிவிக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
மேலும், அரசாங்கம் இதற்கு பதில் சொல்லாமல் எங்கேயும் ஓடி விடாது என்றும் சாணக்கியனை நினைத்து வருத்தப்படுவதாகவும், அவருடைய அறிக்கைகள் அனைத்தும் ஊடகங்களுக்கு முன்னால் மட்டுமே இருப்பதாகவும் அரசாங்கத்தின் தலைமைப் பொதுச்செயலாளர் மேலும் கூறினார்.