புலிகளுக்கு எதிராக கடிதம் அனுப்பவில்லை – சி.வி.கே.

புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பவில்லை என வடக்கு மாகாண அவைத்தலைவர் சி.வி.கே.சிவஞானம் தெரிவித்துள்ளார்.

யாழில் நேற்று (புதன்கிழமை) நடைபெற்ற ஊடக சந்திப்பின்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

இதன்போது மேலும் தெரிவித்த அவர், “நான் தமிழரசு பாரம்பரியத்தில் வந்தவன். சேம் சைட் கோலடிக்கும் தேவை எனக்கு கிடையாது.

எது நியாயமோ எது சரியோ அதை யார் செய்தாலும் சரி என்பேன். அதே பிழை என்றால் பிழை என்று கூறுவது என்னுடைய பொறுப்பு. இனி நான் பயப்படமாட்டேன். இதுவரை நான் அடக்கி வாசித்தேன். என் தலையில் மிளகாய் அரைக்கலாம் என்று சிலர் நினைக்கிறார்கள்.

ஒரு சிலரை தாக்குவதாக நினைத்துக்கொண்டு தமிழரசுக் கட்சியை தாக்குகின்றனர்.

தமிழரசுக் கட்சியை ஓரங்கட்ட நினைப்பது பகல் கனவு. எந்த கொம்பனாலும் அதனை அழிக்க முடியாது. பங்காளி கட்சிகள் போகப் போகிறோம் என முடிவெடுத்தால் அதை நாங்கள் தடுக்க முடியாது. ஆனால் அவர்கள் அவ்வாறான ஒரு முடிவை எடுக்கமாட்டார்கள் என்றே நான் கருதுகிறேன்.

என்னைப்பொறுத்தவரையில் ஊடகச் செய்திகளைப் பார்க்கும் பொழுது சில செய்திகளில் உண்மை இல்லை என்றே தெரிகிறது.

புலிகள் மீதும் விசாரணையை வலியுறுத்தும் ஒரு கடிதத்தை எனக்கு தெரிய மனித உரிமைகள் ஆணைக்குழுவுக்கு தமிழரசுக் கட்சி சார்ந்து அனுப்பியதாக இல்லை. அதை மட்டும் என்னால் உறுதியாக கூற முடியும். அவ்வாறு எழுதினால் நான் அதனை வெளிப்படுத்துவேன்.

கூட்டமைப்பு தேசிய தலைவரால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். ஆகவே அது உடைந்து போவதை நான் தனிப்பட்ட முறையில் விரும்ப மாட்டேன்” எனவும் குறிப்பிட்டார்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *