நாட்டில் தற்போது சமூக மற்றும் அரசியல் பிரச்சினையாக காணப்படும் நீர் பற்றாக்குறை மற்றும் நீர் வழங்கல் தொடர்பான பிரச்சினையை ஒரு அரசியல் ஆயுதமாக மாற்ற அனுமதிக்காமல், சௌபாக்ய தூரநோக்கு கொள்கை அறிக்கையில் வாக்குறுதியளித்தபடி 2025 -க்குள் அனைவருக்கும் குடிநீர் வழங்கத் திட்டமிடப்பட்டுள்ளதாக நீர் வழங்கல் மற்றும் வடிகால் துறை அமைச்சர் வாசுதேவ நாணயக்கார தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தினால் நேற்று ‘2025 ஆம் ஆண்டில் அனைவருக்கும் குடிநீர்’ என்ற தலைப்பில் திணைக்கள கேட்போர் கூடத்தில் ஏற்பாடு செய்யப்பட்ட ஊடகவியலாளர் சந்திப்பில் உரையாற்றும் போதே அமைச்சர் இதனை குறிப்பிட்டார்.
நீர்க் கட்டணங்களை செலுத்துவது மக்கள் எதிர்கொள்ளும் முக்கியமான பிரச்சனை என்பதால் மக்களின் நீர் தேவைகளைப் பூர்த்தி செய்ய நீர் கட்டணங்களை அதிகரிக்காமல் சேவைகளை வழங்க நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு அமைச்சு எதிர்பார்க்கிறது எனவும் அவர் தெரிவித்தார்.
நீர் வடிகால் அமைச்சின் நோக்கம் மக்களின் கட்டணத்தை அதிகரிக்காமல் வருமானத்தை அதிகரிப்பதே ஆகும். பல்வேறு வணிக நிறுவனங்கள் மற்றும் தொழிற்சாலைகளுக்கு நீர் விநியோகிப்பதன் மூலம் வருவாய் அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகின்றது எனவும் தெரிவித்தார்.
நீரை வீணாக்குதல், நீர் முறைகேடு போன்றவற்றால் ஏற்படும் வருவாய் குறைவின் மீதுகவனம் செலுத்தப்படுவதாகவும், மேலும் நீர் இணைப்புகளை அதிகரிக்கவும் வருவாயை அதிகரிப்பதற்கான வழிவகைகளையும் அமைச்சர் வாசுதேவ நாணயக்கார சுட்டிக்காட்டினார் என்பதும் குறிப்பிடத்தக்கது.