யாழ். மாவட்டத்திலுள்ள பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டிகள் வழங்கிவைப்பு

பொலிஸ் நிலையங்களுக்கு முச்சக்கரவண்டி வழங்கும் நிகழ்வு இன்றைய தினம் (19) யாழ்ப்பாணம் பொலிஸ் நிலையத்தில் இடம்பெற்றது.

ஜனாதிபதியின் சுபீட்சத்தின் நோக்கு கொள்கை திட்டத்திற்கமைய அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் வலுவான போக்குவரத்து அமைப்பு காணப்பட வேண்டியதன் அவசியத்தை கண்டறிந்து நாடளாவிய ரீதியில் பொலிஸ் நிலையங்களுக்கு இந்த முச்சக்கர வண்டிகள் கையளிக்கப்பட்டு வருகின்றன.

இதனொரு அங்கமாக யாழ். மாவட்டத்திலுள்ள அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் இன்று முச்சக்கரவண்டிகள் வழங்கிவைக்கப்பட்டன.

யாழ். மாவட்டத்திற்கு கையளிக்கப்பட்ட 40 முச்சக்கர வண்டிகளும் பொலிஸ் நிலையங்களுக்கு தலா இரண்டு முச்சக்கர வண்டிகளென வழங்கி வைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

சுகாதார வழிகாட்டல்களுக்கு அமைய இடம்பெற்ற நிகழ்வில் வடக்கு மாகாண சிரேஷ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் ஜெகத் பளிகக்கார, யாழ். மாவட்ட பிரதி பொலிஸ் மா அதிபர் பிரியந்த லியனகே ஆகியோர் கலந்து கொண்டனர்.

பொலிஸ் நிலையங்களின் குற்றத்தடுப்பு மற்றும் விசாரணை, முறைபாடுகளை விசாரித்தல், 119 அவசர அழைப்பு, சிறுவர் மற்றும் பெண்கள் பிரிவு மற்றும் ஊழல் தடுப்பு பணிகளுக்காக பயன்படுத்தல், உளவுத்துறை பணிகள் மற்றும் சிவில் கடமைகள் செயற்பாட்டிற்கு உறுதுணையாக இரண்டாயிரம் முச்சக்கர வண்டிகளை இலங்கை பொலிஸிற்கு, பிரதமரால் அண்மையில் வழங்கப்பட்டது.

Leave a Reply