அரசாங்கத்தின் போலியான வாக்குறுதிகளை ஏற்றுக்கொள்ள வேண்டாம்! ஐநா உயர்ஸ்தானிகருக்கு சிறீதரன் எம்பி அவசர கடிதம்

இராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசாங்கத்தால் கடந்த 31 ஆம் திகதி அனுப்பிவைக்கப்பட்டிருந்த கடிதம் தொடர்பாக தனது அதிருப்பிதியை வெளியிட்டுள்ளதுடன் ஐ.நா மனித உரிமைகளுக்கான உயர்ஸ்தானிகர் திருமதி மைக்கேல் பேச்லெட் க்கு அவசர கடிதம் ஒன்றை பாராளுமன்ற உறுப்பினர் சிறிதரன் நேற்று புதன்கிழமை அனுப்பியுள்ளார் .

குறித்த கடிதத்தில்,

விடயம்: தமிழ் மக்களின் நிலங்களின் மீதான இராணுவ ஆக்கிரமிப்பு.

உயர் ஸ்தானிகரிற்கு,

வடக்கிலுள்ள தனியார் மற்றும் அரசாங்க நிலங்களை இராணுவ ஆக்கிரமிப்பு தொடர்பில் இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கைகள் குறித்து இதனை நான் எழுதுகிறேன்.

கொழும்பு மற்றும் ஜெனீவாவில் உள்ள இராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசாங்கம் எதிர்வரும் HRC அமர்வின் முன்கூட்டியே எழுதிய கடிதம் தொடர்பான கருத்துக்களை நான் பதிவுசெய்கின்றேன்:

• 25.73 ஏக்கர் தனியார் நிலம் 2021 ஜூன்-ஜூலை மாதங்களில் திருப்பி அளிக்கப்பட்டது. (இது கிளிநொச்சி மாவட்டத்தில் இன்னும் ஆக்கிரமிக்கப்பட்ட நிலத்தின் 0.03% ஆகும்).

• பலாலி விமான நிலையத்திற்காக நிலம் ஒதுக்கி வைக்கப்படுகிறது.

• திருப்பித் தர முடியாத நிலத்திற்கு இழப்பீட்டு வழங்கல் வழிமுறை பரிசீலிக்கப்படுகிறது.

மேலும் திரும்பப் பெறப்பட்ட நிலத்தின் விகிதம் தொடர்பில் மிகவும்; தெளிவற்ற பல்வேறு சதவிகிதங்கள் வலியுறுத்தப்படுகின்றன. கிளிநொச்சி மாவட்டத்தில் மட்டும் இலங்கை இராணுவம் இன்னும் ஆக்கிரமித்துள்ள நிலங்களின் விபரங்களை உள்ளடக்கிய ஒரு விரிதாளை உங்கள் ஆய்வுக்காக இணைக்கிறேன். வடக்கு மற்றும் கிழக்கில் உள்ள இந்த ஒரு மாவட்டத்தில் மட்டும் இன்னும் 4374.8 ஏக்கர் அரசு மற்றும் தனியார் நிலங்கள் ஆக்கிரமிக்கப்பட்டுள்ளதனை நீங்கள் அறிவீர்கள். Oakland Institute இன் அறிக்கையின் படி 2019 ஆம் ஆண்டின் இறுதியில் முல்லைத்தீவு மாவட்டத்தில்; நான்கு மடங்கு நிலம் ஆக்கிரமிக்கப்பட்டிருப்பதை நீங்கள் அறிந்திருப்பீர்கள்.

கடந்த வருடம் பொதுப்பாதுகாப்பு அமைச்சர் சரத் வீரசேகர, இராணுவத்தினரால் ஆக்கிரமிக்கப்பட்டுள்ள நிலம் மீளளிக்கப்படமாட்டாது என அறிக்கைகளுடன் அறிவித்து விட்டு இம்முறை இடம்பெறவுள்ள ஜெனீவா கூட்டத்தொடரிற்கு முன்னர் நில ஆக்கிரமிப்பு தொடர்பான புதிய திட்டங்களை திடீரென அறிவித்தது எவ்வாறு என்று நாங்கள் ஆச்சரியப்படுகிறோம்.

இது தவிர யுத்தம் நிறைவடைந்து 12 வருடங்களின் பின்னர் மற்றும் நிலம் ஆக்கிரமிக்கப்பட்டு பல தசாப்தங்களிற்கு பின்னர் இழப்பீடு மட்டும் ஏன் பரிசீலிக்கப்படுகிறது? அத்துடன் இது எவ்வாறு நல்லிணக்க வாக்குறுதிகளுள் உள்ளடங்குகிறது? நமது மக்கள் பொருளாதார ரீதியாகவும் கலாச்சார ரீதியாகவும் வாழ நிலம் அத்தியாவசியமாகும்.

தொல்பொருள் அகழ்வாராய்ச்சிகள், வனப்பாதுகாப்பு சரணாலயங்கள் மற்றும் பறவைகள் சரணாலயங்கள் என்ற போர்வையில் நில ஆக்கிரமிப்புகள் நடைபெறுகின்றன. மேலும் அவை பெரும்பாலும் மகாவலி அதிகார சபை, தொல்பொருளியல் திணைக்களம், வன பாதுகாப்புத் திணைக்களம், வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்களம் போன்ற பலவற்றால் மேற்கொள்ளப்படுகின்றன.

தயவுசெய்து இந்த கடிதம் நிலம் தொடர்பான பிரச்சினையை மட்டுமே குறித்து நிற்கின்றது. இராஜதந்திரிகளுக்கு இலங்கை அரசாங்கம் எழுதிய கடிதத்தில் தனித்தனியாக கோடிட்டுக் காட்டக்கூடிய பிற பிரச்சினைகள் தொடர்பாக முன்வைக்கும் கூற்றுக்கள் குறித்து எனக்கு மிகவும் தீவிரமான கவலைகள் உள்ளன.

அரசாங்கத்தின் போலியான ஈடுபாடு மற்றும் சீர்திருத்தத்தின் தெளிவற்ற வாக்குறுதிகளை நீங்கள் எடுத்துக்கொள்ள வேண்டாம் என்று நான் உங்களைக் கேட்டுக்கொள்கிறேன். ஏனெனில் இது பாதிக்கப்பட்டவர்களுக்கு செய்யும் துரோகமாகும்.என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *