கிண்ணியாவில் பதுக்கி வைக்கப்பட்ட பொருட்களுக்கு சீல் வைப்பு..!

திருகோணமலை மாவட்ட அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் பணிப்புரைக்கமைய பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலுவலத்தினரால் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பின்போது கிண்ணியா கச்சகொடித்தீவு பிரதேசத்தில் சூட்சமமான முறையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 50 கிலோ கிராம் நிறையுடைய 120 மூடைகள் இன்று கண்டுபிடிக்கப்பட்டதுடன் அவற்றுக்கு முத்திரை இடப்பட்டுள்ளதாக அரசாங்க அதிபர் தெரிவித்தார்.

மேலும் இரகசியமாக கிடைக்கப்பெற்ற தொலைபேசி அழைப்பை அடுத்து குறித்த பிரதேசத்திற்கு பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்கள் அனுப்பப்பட்டு குறித்த சுற்றிவளைப்பு மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனினும் இதன்போது பிறிதொரு பொருட்கள் அடங்கிய களஞ்சியசாலையில் குறித்த 120 சீனி மூடைகளும் பதுக்கி வைக்கப்பட்டு இருந்ததாகவும் உரியநபருக்கு எதிராக பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை சட்டத்தின்படி உரிய அதிகாரசபையால் நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்தார்.

மேலும் சில தினங்களாக மாவட்டத்தின் பல்வேறு பிரதேசங்களிலும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட சில பொருட்கள் கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக விற்கப்பட்டு வருவதாக தமக்கு முறைப்பாடு பொதுமக்களால் செய்யப்பட்டுள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு அவ்வாறான பிரதேசங்களை இனங்கண்டு சுற்றிவளைப்புகள் மேற்கொண்டு அவர்களுக்கெதிராக சட்ட நடவடிக்கை எடுக்குமாறு தாம் அறிவுறுத்தல் வழங்கியதாக இதன்போது அரசாங்க அதிபர் மேலும் குறிப்பிட்டார்.

எனினும் தற்போதைய சூழ்நிலையில் கையிருப்பில் பொருட்களை வைத்துக்கொண்டு அவற்றை மொத்த ,சில்லறை அடிப்படையில் விற்பனை செய்யாமல் செயற்கையான முறையில் பொருட்களுக்கு தட்டுப்பாட்டை ஏற்படுத்தி அவற்றை பதுக்கி வைத்திருப்பது அனுமதிக்க முடியாது. மக்கள் பொருளாதார அசௌகரியங்களுக்கு மத்தியில் தற்போது வாழ்ந்து வருவதாகவும் அரசாங்கத்தால் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு பொருட்களை வழங்க வேண்டிய தேவை காணப்படுகின்றது.

மேலும் இவ்வாறான சுற்றிவளைப்புகள் மாவட்டத்தினுடைய பல்வேறு பிரதேசங்களிலும் தொடராக மேற்கொள்ளப்பட உள்ளதாகவும் பாவனையாளர்களது நலன் தொடர்பில் கூடிய அக்கறை கொண்டு இச்செயற்பாட்டை தொடர்ச்சியாக மேற்கொள்ள திட்டமிட்டு உள்ளதாகவும் பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை உத்தியோகத்தர்களுக்கு உரிய அறிவுறுத்தல் தம்மால் இது தொடர்பில் வழங்கப்பட்டுள்ளதாக மாவட்ட அரசாங்க அதிபர் இதன்போது குறிப்பிட்டார்.

மாவட்டத்தினுடைய ஏதாவது ஒரு பிரதேசத்தில் அறிவிக்கப்பட்ட கட்டுப்பாட்டு விலைக்கு மேலதிகமாக பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்ற பொழுதும் அதே போன்று நெல் அளவுக்கதிகமான முறையில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது அல்லது களஞ்சியப்படுத்தி வைக்கப்பட்டிருப்பது தொடர்பான விபரங்கள் மக்களுக்கு தெரியுமெனின் அது குறித்து மாவட்ட செயலகத்தையோ, பிரதேச செயலகத்தையோ அல்லது பாவனையாளர்கள் அதிகார சபையையோ தொடர்புகொண்டு குறித்த தகவல்களை வழங்குமாறு இதன்போது அரசாங்க அதிபர் மக்களிடம் வேண்டிக் கொண்டார்.

இன்று(9) நடைபெற்ற குறித்த சுற்றிவளைப்பின் போது பாவனையாளர் அலுவல்கள் அதிகாரசபை மாவட்ட அலுவலக விசாரணை உத்தியோகத்தர் தனசேகரன் வசந்தசேகரன் தலைமையிலான உத்தியோகத்தர்கள் சுற்றிவளைப்பில் ஈடுபட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *