தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் ஐநாவுக்கு அனுப்பிய கடிதத்தில் உள்ள விடயங்களை எமது கட்சியில் உள்ள எல்லோரும் ஏற்றுக்கொண்டதாக இல்லை என பாராளுமன்ற உறுப்பினர் சிவஞானம் சிறிதரன் தெரிவித்துள்ளார்
தமிழ் தேசிய கூட்டமைப்பால் ஐ.நா வுக்கு அனுப்பப்பட்ட கடிதம் தொடர்பில் பல்வேறு விமர்சனங்களும் குற்றச்சாட்டுகளும் முன்வைக்கப்பட்டு வருகின்றமை தொடர்பில் இன்று அவரது அலுவலகத்தில் நடைபெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்துள்ளார்
மேலும் தெரிவிக்கையில்,
அதாவது இலங்கையில் ஒரு போர்க்குற்றம் நடைபெற்றது. இன அழிப்பு நடைபெற்றது என்பது தெட்டத் தெளிவான உண்மை அதாவது இன்று காணாமல்ப்போனோர் பற்றியோ அல்லது நில ஆக்கிரமிப்புக்கள் பற்றியோ எந்தவிதமான முன்னேற்றமும் இல்லை. தமிழர்கள் அடக்கிய ஆளப்படுகின்ற ஒரு நிலையே இங்கு காணப்படுகின்றது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் அங்கத்துவக் கட்சிகளில் ஒன்றான ரெலோ அமைப்பினூடாக எமக்கு அனுப்பப்பட்ட கடிதத்தில் நாம் எந்த கையொப்பமும் இடவில்லை
அதேபோல சுமந்திரன் மின்னஞ்சல் ஊடாக அனுப்பி வைக்கப்பட்ட கடிதத்தில் இருதரப்பும் போர்க் குற்றத்தில் ஈடுபட்டவர்கள் என்ற விடயம் உள்ளடக்கப்பட்டு இருக்கின்ற காரணத்தினால் அது பற்றி நாங்கள் ஆராயவேண்டும் என்றும் காரணம் இது ஒரு தரப்பு களத்தில் இல்லை மற்றைய தரப்பான அரசு இந்த நாட்டினுடைய இறைமையுள்ள அரசை நடத்துகின்ற ஒரு அரசாங்கம் தன் குடிமக்கள் மீது போர் குற்றத்தை நடத்தியுள்ளது குண்டுகளை வீசி மக்களை படுகொலை செய்திருக்கிறது பாதுகாப்பு வலயங்கள் என்ற போர்வையில் மக்களை அழைத்து அதற்குள் குண்டு போட்டுக்கொலை செய்துள்ளது.
எனவே இன அழிப்புப் போர்க்குற்றம் புரிந்திருந்தால் அதில் ஒரு தரப்பு இல்லாவிடின் அதனை எவ்வாறு விசாரிப்பது, கண்முன்னே நடந்த இனப்படுகொலை தொடர்பாக அந்த கடிதத்தில் குறிப்பிட்ட விடயம் எங்களுக்கு ஒத்து வரக் கூடியதாக இருக்கவில்லை அது பற்றி கடந்த திங்கட்கிழமை ஆராயலாம் என தீர்மானித்த நிலையில் ஞாயிற்றுக்கிழமை இணைய வழியிலான ஒரு கலந்துரையாடலின்போது சம்பந்தன் ஐயா குறித்த கடிதத்தை தான் ஒரு தனிமனிதனாக அனுப்பிவிட்டார் என்று பாராளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் குறிப்பிட்டிருந்தார்
அவர் அதனை அனுப்பியிருந்தால் நாங்கள் எதனையும் செய்ய முடியாது காரணம் அவர் சிங்கக் கொடியை பிடித்து விட்டு காளியின் கொடி என்று சொல்லுவார் மக்கள் அதனை ஏற்றுக் கொள்வார்கள் அவர் பாராளுமன்றத்தில் புலிகள் ஜனநாயகத்தை மதிக்கவில்லை மனித உரிமை மீறல்களை புரிந்தார்கள் அதனால் அவர்கள் அழிந்தார்கள் என்று பேசுவார் அதையும் மக்கள் ஏற்றுக் கொள்வார்கள் என்ற நம்பிக்கை அவருக்கு உள்ளது
ஆனால் கடிதத்தை அனுப்பி விட்டு இரண்டு தரப்பையும்விசாரிக்க வேண்டும் என்றால் எல்லோரும் ஏற்றுக் கொண்டதாக கருதமுடியாது அவர் அனுப்பி இருக்கின்ற கடிதம் தொடர்பில் நாங்கள் அனைவரும் ஏற்றுக் கொண்டதாக இல்லை நாங்கள் இது தொடர்பில் பல்வேறு தரப்பினருடனும் கலந்துரையாடி இருக்கின்றோம். பேசி இருக்கிறோம் ஆனால் கடந்த 19ஆம் திகதி அனுப்ப வேண்டிய கடிதத்தை நாங்கள் அனுப்ப தவறி இருக்கிறோம் இது எங்களிடம் இருக்கின்ற பெரும் தவறு என மேலும் தெரிவித்தார்.