மன்னார் வைத்தியசாலையில் சுகாதார பணியாளர்கள் பணிப்புறக்கணிப்பு போராட்டம்

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசாதகர்கள் ஆகிய தமக்கு அநீதி இழைக்கப்பட்டுள்ளதாகவும், தமக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை வழங்கக்கோரி இன்றைய தினம் (19) காலை வைத்தியசாலை வளாகத்தில் பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர்.

காலை 10 மணி தொடக்கம் 12 மணி வரை குறித்த பணிப்பகிஸ்கரிப்பு போராட்டம் இடம்பெற்றது.

மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றும் தமக்கு கடந்த 2020 ஆம் ஆண்டு செம்டெம்பர், நவம்பர் மற்றும் இவ்வருடம் ஜனவரி, பெப்ரவரி, மார்ச், ஏப்ரல் ஆகிய மாதங்களுக்கான மேலதிக நேரக் கொடுப்பனவை மட்டுப்படுத்தி 60 மணித்தியாலங்கள் மாத்திரம் வழங்கி இருந்தார்கள்.

60 மணித்தியாலங்களுக்கு மேலதிகமாக பணியாளர்கள் மேற்கொண்ட நேரங்களுக்கான கொடுப்பனவை இது வரை காலமும் தமக்கு வழங்கவில்லை என போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் தெரிவித்தனர்.

குறித்த விடையம் தொடர்பாக பல தடவைகள் எழுத்து மூலமாகவும் தொழிற்சங்க அடிப்படையிலும் பணியாளர்கள் ஒன்றிணைந்து வைத்தியசாலையில் பணிப்பாளர் உள்ளிட்ட அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு வந்தும் இதுவரை எவ்வித நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படவில்லை.

கடந்த 2 ஆம் திகதி குறித்த விடையம் தொடர்பில் கடிதம் ஒன்றை பணிப்பாளருக்கு அனுப்பி இருந்தோம்.கடந்த 9 ஆம் திகதிக்கு முன் சரியான முடிவை வழங்குமாறும், அவ்வாறு சரியான முடிவு கிடைக்காத பட்சத்தில் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடுவோம் என தெரிவித்திருந்தோம்.

பணியாளர்களாகிய எங்களை வைத்தியசாலை நிர்வாகம் தொடர்ந்தும் ஓர வஞ்சனையாக பார்த்துக் கொண்டுள்ள நிலையில் இன்றைய தினம் (19) காலை பணிப்பகிஸ்கரிப்பு போராட்டத்தை முன்னெடுத்தோம்.

மேலதிக நேர கொடுப்பனவை வழங்கக்கோரி மேற்கொண்ட நடவடிக்கைகளை தோழ்வியடைந்த நிலையிலே குறித்த போராட்டத்தை முன்னெடுத்ததாக தெரிவித்தனர்.

மன்னார் மாவட்டத்தை தவிர வடக்கில் உள்ள ஏனைய மாவட்ட வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற பணியாளர்களுக்கான மேலதி நேர கொடுப்பனவு முழுமையாக வழங்கப்படுகின்றது.

எனவே எமக்கு சரியான தீர்வு கிடைக்காத சந்தர்ப்பத்தில் போராட்டம் தொடரும் என போராட்டத்தில் ஈடுபட்ட மன்னார் மாவட்ட பொது வைத்தியசாலையில் கடமையாற்றுகின்ற சுகாதார சேவைகள் பணியாளர்கள் மற்றும் பரிசாதகர்கள் தெரிவித்தனர்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *