ரிஷாட்டின் வீட்டில் வேலை செய்த சிறுமி குறித்த அறிக்கை நீதிமன்றில் இன்று தாக்கல்!

நாடாளுமன்ற உறுப்பினர் ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணிப் புரிந்த நிலையில், தீ காயங்களுடன் மர்மமான முறையில் உயிரிழந்த சிறுமியின் மரணம் குறித்து பல்வேறு தரப்பிடம் வாக்குமூலம் பதிவு செய்யப்பட்டுள்ளன என பொலிஸார் தெரிவிக்கின்றனர்.

பொரள்ளை பொலிஸார் மற்றும் கொழும்பு தெற்கு பெண்கள் மற்றும் சிறுவர் விசாரணை பிரிவு ஆகியன விசாரணைகளை நடத்தி வருவதாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதி பொலிஸ் மாஅதிபர் அஜித் ரோஹன தெரிவிக்கின்றார்.

சிறுமியை ஹட்டன் − டயகம பகுதியிலிருந்து கொழும்புக்கு பணிக்காக அழைத்து வந்த நபரிடம் இன்று வாக்குமூலம் பதிவு செய்யவுள்ளதாகவும் அவர் கூறுகின்றார்.

சிறுமியின் தாய் மற்றும் ரிஷாட் பதியூதீனின் மனைவியின் தந்தை ஆகியோரிடம் நேற்று வாக்குமூலம் பெற்றுக்கொள்ளப்பட்டுள்ளது.

இந்த நிலையில், சிறுமியின் பிரேத பரிசோதனை அறிக்கை நீதிமன்றத்தில் இன்று தாக்கல் செய்யப்படவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

ரிஷாட் பதியூதீனின் வீட்டில் பணியாற்றிய சிறுமி, தீக்காயங்களுடன் கடந்த 3ம் திகதி கொழும்பு தேசிய மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

இவ்வாறு அனுமதிக்கப்பட்ட சிறுமி, சிகிச்சை பலனின்றி கடந்த 15ம் திகதி உயிரிழந்தார்.

இதன்படி, சிறுமியின் சடலம் மீது நடத்தப்பட்ட பிரேத பரிசோதனையில், சிறுமி தொடர்ச்சியாக பாலியல் துன்புறுத்தல்களுக்கு உட்படுத்தப்பட்டுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.

Leave a Reply