பள்ளக்காட்டில் தரம்பிரிக்கப்படாத குப்பைக்குத் தடை; புதிய நடைமுறை அமுல்

கல்முனை மாநகர சபை எல்லையினுள் முன்னெடுக்கப்படும் திண்மக்கழிவுகற்றல் சேவையின்போது தரம்பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே பொறுப்பேற்கப்படும் என கல்முனை மாநகர சபை அறிவித்துள்ளது.

கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் பணிப்புரைக்கமைவாக அட்டாளைச்சேனை, பள்ளக்காடு பகுதியில் தரம்பிரிக்கப்படாத குப்பைகளைக் கொட்டுவததற்கு விதிக்கப்பட்டிருக்கின்ற தடையைக் கவனத்தில் கொண்டே இத்தீர்மானம் எடுக்கப்பட்டிருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இவ்விடயம் தொடர்பாக கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் இன்று (19) வெளியிட்டுள்ள விசேட அறிவித்தலில் மேலும் தெரிவித்திருப்பதாவது;

கல்முனை மாநகர சபை எல்லையினுள் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதற்கென இடமொன்று (Dumping Place) எமது கல்முனை மாநகர எல்லையினுள் இல்லாமையினால், அட்டாளைச்சேனை பிரதேச சபைக்குட்பட்ட பள்ளக்காடு எனும் பகுதியிலுள்ள திண்மக்கழிவு முகாமைத்துவ நிலபரப்பிலேயே அவை கொட்டப்பட்டு வருகின்றன. இதற்காக எமது மாநகர சபையினால் அட்டாளைச்சேனை பிரதேச சபைக்கு கழிவுகளின் நிறைக்கேற்ப கட்டணம் செலுத்தப்பட்டு வருகின்றது.

எவ்வாறாயினும், அரசாங்கத்தின் தேசிய கொள்கைத் திட்டத்தின் பிரகாரம் கிழக்கு மாகாண உள்ளூராட்சி ஆணையாளரின் கட்டாய அறிவுறுத்தலுக்கமைவாக தரம் பிரிக்கப்பட்ட குப்பைகள் மாத்திரமே குறித்த திண்மக்கழிவு முகாமைத்துவ நில நிரப்புகை நிலையத்தில் கொட்டுவதற்கு அனுமதிக்கப்படும் என அட்டாளைச்சேனை பிரதேச சபை எமது மாநகர சபைக்கு அறிவித்திருப்பதுடன் தரம்பிரிக்கப்படாத குப்பைகள் கொட்ட அனுமதிக்கப்பட மாட்டாது எனத் தெரிவித்து, தடை விதித்துள்ளது.

இதனால் கடந்த சில நாட்களாக எமது மாநகர பிரதேசங்களில் சேகரிக்கப்படுகின்ற திண்மக்கழிவுகளை கொட்டுவதில் எமது மாநகர சபை பாரிய சவாலை எதிர்நோக்கி வருகின்றது.

ஆகையினால், உடனடியாக அமுலுக்கு வரும் வகையில், பொது மக்கள் தமது வீடுகளில் சேர்கின்ற சமையலறைக் கழிவுகள், உணவுக் கழிவுகள், மரக்கறி, இலை, குலைகள் போன்ற உக்கக்கூடிய கழிவுகளை ஒரு பையிலும் பிளாஸ்டிக், பொலித்தீன், டின்கள் மற்றும் அன்றாட வாழ்க்கையில் பயன்படுத்தப்பட்டு, கழிக்கப்படுகின்ற உக்க முடியாத பொருட்களை மற்றொரு பையிலும் வெவ்வேறாக ஒப்படைக்க வேண்டும் என வலியுறுத்திக் கேட்டுக்கொள்கின்றோம்.

இவ்வாறு தரம் பிரிக்கப்படாத குப்பைகள் எக்காரணம் கொண்டும் மாநகர சபையின் திண்மக்கழிவகற்றல் வாகனங்களில் பொறுப்பேற்கப்பட மாட்டாது என்பதை வருத்தத்துடன் அறியத்தருகின்றோம்.

எனவே, கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பொது மக்கள் அனைவரும் நிலைமையை உணர்ந்து, திண்மக்கழிவகற்றல் சேவையை வெற்றிகரமாக முன்னெடுப்பதற்கு மேற்படி நடைமுறையை கட்டாயம் பின்பற்றி, முழுமையான ஒத்துழைப்பு வழங்குமாறு கேட்டுக்கொள்கின்றேன்- என கல்முனை மாநகர சபையின் பிரதம சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் அர்ஷாத் காரியப்பர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

[embedded content]

பிற செய்திகள்:

சமூக ஊடகங்களில்:

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *