
கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளரின் செயற்திறமையற்ற நடவடிக்கைகள் மற்றும் ஊழல் மோசடிகள் காரணமாக மாநகர மக்களுக்கான சேவைகள் தடைப்பட்டு வருகின்றன.
இதனால் இந்த நிலைமை தொடராமல் தடுப்பதற்கு, தகுதியான ஆணையாளர் ஒருவரை நியமிக்க வேண்டும் என்பது மாநகரசபையை பிரதி நிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் நிலைப்பாடாகும். அவர்களின் தீர்மானத்துக்கமைய தற்போதுள்ள கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளரை நீக்கிவிட்டு, தகுதியான ஒருவரை நியமிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என கொழும்பு மாநகரசபை மேயர் ரோசி சேனாநாயக்க தெரிவித்துள்ளார்.
மேயர் ரோசி சேனாநாயக்க மேல் மாகாண ஆளுநர் எயார் மார்ஷல் ரொஷான் குணதிலக்கவுக்கு அனுப்பி வைத்துள்ள கடிதத்திலேயே இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
அரசியலமைப்பில் மாகாண ஆளுநர்களுக்கு வழங்கப்பட்டிருக்கும் அதிகாரத்துக்கமைய, கொழும்பு மாநகரசபை நகர ஆணையாளர் பதவிக்கு கடந்த 2020.01.14 ஆம் திகதி உங்களால் நியமிக்கப்பட்ட ரோஷனி திஸாநாயக்கவின் செயற்பாடுகளால் கொழும்பு மாநகரசபையின் அனைத்து அபிவிருத்தி நடவடிக்கைகளும் தடைப்படாமல் இருப்பதற்கும் கொழும்பு மாநகரசபை காரியாலய உறுப்பினர்கள் தைரியமற்று அசெளகரியங்களுக்கு ஆளாவதை தடுப்பதற்கு கொழும்பு மாநகரசபையின் அனைத்து உறுப்பினர்கள் சார்ப்பாக, அவர்கள் பிரதிநிதித்துவப்படுத்தும் கட்சி தலைவர்களின் பெரும்பாலானவர்களின் கோரிக்கைக்கமைய, இது தொடர்பாக கலந்துரையாடலில் பல தடவைகள் சந்தர்ப்பம் கோரி இருந்தோம். என்றாலும் இதுவரை அதற்கான சந்தர்ப்பம் கிடைக்கவில்லை.
என்றாலும் கடந்த இரண்டு வாரங்களாக நகர ஆணையாளர், தனது கடமை மற்றும் பொறுப்புக்களை தட்டிக்கழித்து, தான்தோன்றித்தனமாக மாநகர சபை அதிகாரிகளை மன அழுத்தங்களுக்கு ஆளாக்கி, சபையின் நடவடிக்கைகளுக்கு தடைகளை ஏற்படுத்த நடவடிக்கை எடுத்துள்ளார்.
இதனால் நகரசபையின் பொறுப்புக்களை முறையாக நிறைவேற்ற தவறிய என்ற விடயத்தை அடிப்படையாகக்கொண்டு, அவருக்கு எதிராக முறையான ஒழுக்காற்று விசாரணை ஒன்றை மேற்கொள்ள வேண்டும். அத்துடன் நகர ஆணையாளர் பதவிக்கு தகுதியான அதிகாரி ஒருவரை நியமிக்கவும் விரைவாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என மாநகர மேயர் உள்ளிட்ட அனைத்து உறுப்பினர்கள் சார்ப்பாக கேட்டுக்கொள்கின்றேன் என தெரிவித்துள்ளார்.