தீப்பள்ளயம் – பாண்டிருப்பு இளைஞனின் பசுமையான நினைவு மீட்டல் – செல்லத்துரை அசோக்

தீப்பள்ளயம் – பாண்டிருப்பு இளைஞனின் பசுமையான நினைவு மீட்டல் – செல்லத்துரை அசோக்

கொவிட் அச்சுறுத்தலால் ஆலயங்களில் திருவிழாக்கள் இல்லை பண்டிகைகள் களைகட்டவில்லை எந்த நிகழ்வுகளும் இல்லை.இவ்வாறே பாண்டிருப்பு ஸ்ரீ திரொபதை அம்மன் ஆலய உற்சவமும் இந்த வருடம் நடைபெறவில்லை. தீப்பள்ளயம் என்றாலே பாண்டிருப்பு மட்டுமல்ல கல்முனை பிராந்தியமே கோலாகலமாக காட்சியளிக்கம். ஆலய உற்சவம் நடைபெறாததால் இப்பிரதேச மக்கள் மனங்களில் கவலை குடிகொண்டுள்ளதை அவதானிக்கலாம்.

அவ்வாறே பாண்டிருப்பைச் சேர்ந்த செல்லத்துரை அசோக் எனும் இளைஞன் தனது மனக்கவலையையும், ஆலய உற்சவ கடந்த கால பசுமை நினைவுகளையும், இவ்வாறு பதிவிட்டிருந்தார். இதனை தருகின்றோம்.

பாண்டிருப்பு என்றாலே முதலில் ஞாபகம் வருவது எங்கள் திரௌபதை அம்மன் கோவில் தான.; வருடா வருடம் ஒன்பதாம் மாதம் வந்தாலே எப்படா கோவில் திருவிழா தொடங்கும் என்று ஒவ்வொருத்தரும் கற்பனையிலயே வாழ்ந்திட்டு இருப்பம் வருடம் முழுவதும் அந்த ஒரு மாதத்துக்காகவே காத்திருப்பம்.

திருவிழா நடக்கும் பதினெட்டு நாளும் ஒவ்வொருத்தர் வீட்டிலையும் திருவிழா போலதான் இருக்கும.; வெளிநாட்டுக்கு வேலைக்கு போனவங்க கூட ஒரு மாச விடுமுறை எடுத்து சொந்த காசுல டிக்கெட் போட்டு நாட்டுக்கு வந்திடுவாங்க.
ஊரில இருக்கிறவங்க யாரும் வெளியூருக்கு போக மாட்டாங்க. எனக்கு மாசத்துக்கு ஒரு தரம் கொழும்புக்கு போக வேண்டி வரும் ஆனா கோவில் தொடங்குற மாசம் மட்டும் ஏதாவது பொய் சொல்லி கூட்டத்துக்கு போகாம ஊரிலயே நின்றுவிடுவன்.

ஊருக்குள்ள பதினெட்டு நாளும் மீன் வியாபாரிய காணமுடியாது.அவ்வளவு ஒற்றுமையா இருப்பம்.
வெளியூரில் இருக்கிற சொந்தங்கள் எல்லாம் வீட்டுக்கு வந்து வீடே திருவிழாவாகிடும். முதல் ஏழு நாளும் ஊர் ஆக்கள் தான் அதிகமா கோவிலுக்கு வருவாங்க அந்த 7 நாட்களில் நாங்க சின்ன வயதில கோவிலை சுத்தி இருக்கூற ஆலமரத்தின் விழுதில ஊஞ்சல் ஆடி ஓடி பிடிச்சு விளையாடுன விளையாட்டு எல்லாம் இப்பவும் கண்ணுக்குள்ள இருக்கு.

கோவில் தொடங்கி இரண்டாவது நாளில் மகாபாரதம் பாராயணம் பண்ண தொடங்கின உடனே கோவில் ஒலிபெருக்கியில் அந்த மகாபாரத கதை சத்தம் மருதமுனை வரைக்கும் கேட்கும். அந்த சத்தம் ஊர் முழுக்க கேட்டுத்தே இருக்கும். கோவிலில் வந்து தங்கட நேர்த்திய சொல்லிட அது அடுத்த வருடமே நடந்ததும் அவங்க வைச்ச நேர்த்திய தீர்க்க வரும் சனத்த பார்க்கும் போதே மனசுக்க ஒரு தனி சந்தோஷம் வரும். ஆயிரக்கணக்கான முள் காவடிஇ தூக்குக்காவடிஇ அங்கப்பிரதட்சணம் செய்ய கூட இடம் இருக்காது அதுவே தாயாரின் சக்திக்கு சாட்சி.

கோவில் திறந்தாலே ஊர் முழுக்க பண்டார மனம் வீசும் ஊரில இருக்கிற பெரும்பாலானவர்களின் நெத்தியில பண்டாரம் எப்பவும் இருக்கும். அதுவும் பூசை முடிஞ்சதும் தருமர் ஐயாட கையால பண்டாரம் சாத்தவே ஒரு தனி படை நிற்கும்.

; நான் உட்பட ஊருக்கே அடையாளமாக ஒவ்வொருத்தரும் கையில மஞ்சல் நிறத்தில காப்பு கட்டுவம் அந்த காப்ப பார்த்தாலே தெரிஞ்சுடும் இவங்க பாண்டிருப்புதான் என்று.

ஒவ்வொரு நாளும் இரண்டு நேர பூசை நடக்கும் அதிகாலையும் மாலையும். அதுலையும் காலையில் சூரியன் உதிக்கும்வரை தூங்கிற பெடியலும் பூசைக்கு போக காலையில் நான்கு மணிக்கே எழும்பி போய் பூசையை முன்னால இருந்து பார்க்க முன் வரியில இருப்பாங்க. பூசை தொடங்க ஒருமணி நேரத்துக்கு முதல் ஊரில எந்த ரோட்டுக்கு போனாலும் அங்க வேட்டியும் சேலையுடனும் குறைந்தது பத்து பேராவது நடந்து வருவதை காணலாம்.

இளவயது ஆண்கள் பெண்கள் கூட பூசைக்கு வரும் போது வேட்டி சேலைதான் தான் அணிந்து வருவாங்க அந்த கட்டுப்பாடு எல்லார் மனசிலயும் தானாவே வந்துவிடும்.

கோவில் முழுக்க வேட்டி சட்டையோட ஆக்கள் இருக்கிறதே ஒரு தனி அழகு. ஒவ்வொரு நாளும் பூசை முடிய உள் அமுது வாங்க லைன்னில் நிப்போம். தாமரை இலையில் தேவர்களுக்காக சமைத்த உணவு உப்பில்லாமல் சமைத்து எல்லா மரக்கறியும் போட்டு ஒன்றாக கலந்து தருவாங்க அத சாப்பிடும் போது வரும் சுவை உப்பு போட்டு சாப்பிடும் சாப்பாட்டைவிட அதிகமான சுவையாக இருக்கும்.

தோரணைப்பூசை நேரம் சின்ன பையில் தீர்த்தம் கிடைக்கும். இரண்டு தீர்த்த பைகளை வாங்கி ஒன்றை அங்கேயே குடித்துவிட்டு மற்றையதை வீட்ட கொண்டு போவம்.
கூட்டத்தில் மல்லுகட்டி அந்த தீர்த்தத்த வாங்கும் போது சின்ன பிள்ளையாவே மாறிடுவம். களியாணக்கால் வெட்ட போகும் போது திரள் திரளாக மக்கள் ஊரின் எல்லையில் போய் அங்க அந்த தரிசனத்த பார்க்க ஆவலாக இருப்பாங்க. அதிலையும் அங்க வெட்டும் மரத்தின் இலையை எடுத்து வீட்ட கொண்டு போய் வைச்சா திரௌபதையே வீட்டுக்கு வந்தமாதிரி உணர்வு வரும் அதுக்காகவே அடிபட்டு அந்த இலைய பறிப்பம்.

புதன்கிழமை நடக்கும் வனவாசம் தான் ஊருக்கே சிறப்பு பஞ்சபாண்டவர்கள் மஞ்சள் குளித்து அலங்கரித்து வரும் அழகே தனியழகு. பத்து கிலோமீட்டர் தூரம் பாண்டிருப்யில் ஆரம்பித்து மணற்சேனை நட்பிட்டிமுனை சேனைக்குடியிருப்பு என்று கால் வலிக்க நடந்து போய் கடைசியா ஊருக்கு வரும் போது வருடா வருடம் பஞ்சபாண்டவர்கள் ஊருக்கு வந்து சேரும் போது கட்டாயம் மழை பெய்யும் அந்த மழையில் நனையாமல் வீடு வந்து சேர்ந்தவங்க யாரும் இருக்க மாட்டாங்க.
நான் எல்லாம் சின்ன வயசில வீமருக்கு பின்னால வாழைக்குலை வெட்ட மரதன் போல் ஓடுவன் அது எல்லாம் வேற மறக்கமுடியாத தருணங்கள்.. சிறுவர் முதல் வயது போன பாட்டி வரைக்கும் கஸ்டமே தெரியாம நடந்து வந்து சேருவாங்க இடையிடைய இருக்கிற ஒவ்வொரு கோவில்களிலும் தயிர் தீர்த்தம் மோர் என விதம் விதமாக கொடுப்பாங்க. பணக்காரன் ஏழை என்று வித்தியாசம் இல்லாமல் அத வாங்கி குடிச்சிக்கொண்டே நடந்தகொண்டு செல்வோம்.

வனவாசம் முடிஞ்சதும் தவநிலை நடக்கும் அதுவும் இரவு ஒரு மணி போல அர்ச்சுனன் பாசுபதம் பெரும் அந்த நிகழ்வ கண் விழித்து பார்த்துக்கொண்டு இருப்போம். கடைசி நாள் தீமிதிப்பு நடக்கும் போது மனதுக்கே ஏதோ ஒரு கவலை வரும் திருவிழா முடிய போகுதே என்று. கோவிலுக்கு வார கடைய எல்லாம் சுத்திப் பார்க்க பார்க்க நேரமும் போய்டும். கையில் இருக்கிற காசும் போய்டும் கடை சுத்தும் போது பார்க்கிற சொந்தகாரங்களுக்கு எல்லாம் ஐஸ்கிறீம் வாங்கி கொடுத்து சின்ன பிள்ளைகளுக்கு விளையாட்டு சாமான் எல்லாம் வாங்கி கொடுத்து விட்டுப் போன சொந்தத்த எல்லாம் இணைத்துவைக்கும் இந்த திருவிழா. பல வருட சண்டையும் அந்த ஐஸ்கிரீம் ல மறதுவிடும். கடை சுத்தும் போது காதல் கதைகளும் நினைவில் வரும். ஊரில இருக்கிறவங்த பெரும்பாலும் கடைசி நாள் இரவு தான் கடை சுத்த போவாங்க ஏன் என்றால் அன்றுதான் பொருட்களுக்கு விலை குறையுமாம் என்று ஒரு எண்ணம். நானும் அம்மா கேட்ட அப்பம் சுடும் சட்டி கத்தி அகப்பை என வாங்கி கொண்டு வீட்ட கொடுக்கும் போது ஏதோ எதையோ சாதித்த திருப்தி வரும்.

இதுக்கு இடையில் பூசை நேரம் வார சண்டைகள் கடைசுத்தும் போது வரும் கோஷ்டி முறுகல்கள் எல்லாமே ஒரு தனி அழகு தான். என்ன தான் ஊருக்குள்ள பல வகையில் பிரிந்து இருந்தாலும் இந்த பதினெட்டு நாளும் ஊரே விழாக்கோலம் போட்ட மாதிரி இருக்கும். கோவிலில் இருந்து வடக்கு கிழக்கு என்று ஒவ்வொரு பக்கம் போகும் வீதியையும் அந்த அந்த பகுதி பெடியல் அலங்கரித்து வர்ண மின்விளக்குகள் பொருத்தி அழகாக வைப்பாங்க.
ஊரில் இருக்கிற அனைத்து கோவில் நிருவாகமும் அம்மாளுக்கு பெனர் அடிச்சு அவங்க ஆதரவை காட்டுவாங்க. அக்கரைப்பற்றில் இருந்து மட்டக்களப்பு வரைக்கும் இருக்கிற சனம் எல்லாம் கோவிலுக்கு படையெடுத்து வரும் போது தான் இந்த ஊரில பிறந்ததை நினைத்து ஒரு பூரிப்பு வரும்.

கோவில் கதவு மூடின உடனே எப்படா அடுத்த வருடம் வரும் என்று கற்பனையி;ல் இந்த வருடம் நடந்த விடயத்தை எல்லாம் யோசித்து நண்பர்களுடன் பேசிக்கொண்டு நகரும் போதே அடுத்த வருடம் வந்துவிடும். ஆனா இந்த வருடம் இந்த பாழாய்ப்போன கொரோனாவால் கோவில் திருவிழா நடக்கவில்லை. இப்ப ஊரே எதையோ இழந்த மாதிரி உள்ளது.
ஒவ்வொரு நாளும் கோவிலை பார்த்து தான் நான் வேலைக்கு போவன் அப்பிடி கோவிலை தாண்டும் போது ஏதோ ஒரு ஏக்கம் இந்த நான்கு நாட்களாக வருகிறது. அந்த அம்மாளை பார்த்திட்டு போனால் அந்த நாள் முழுக்க சிறப்பாக நடக்கும். இது எல்லாம் ஊரில இருக்கிறவங்களுக்கு புரியும்.

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *