முல்லைத்தீவு மாவட்டத்தின் சிறந்த உடற்கல்வி பயிற்றிவிப்பாளரும், ஓய்வு பெற்ற முல்லைத்தீவு கல்வி வலய உடற்கல்வி பாட ஆசிரிய ஆலோசகரும், ஓய்வு பெற்ற உடற்கல்வி உதவிக் கல்விப்பணிப்பாளருமான மைக்கல் திலகராஜா நேற்று(12) உடல்நலக்குறைவு காரணமாக உயிரிழந்துள்ளார்.
முல்லைத்தீவு மாவட்டத்தின் புதுக்குடியிருப்பு பிரதேசத்தை பிறப்பிடமாகவும் வசிப்பிடமாகவும் கொண்ட இவர் முல்லைத்தீவு மாவட்டத்தில் பல விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமையினை கொண்டவர்.
விளையாட்டுத்துறை சார்ந்த வளர்ச்சியுடன் முல்லைத்தீவு மாவட்ட விளையாட்டுத்துறை வளர்ச்சிக்காகவும் அளப்பெரிய பங்காற்றியதுடன் பலர் இத்துறையில் அரச வேலைவாய்ப்பை பெற வழிகாட்டியாக திகழ்ந்ததுடன், சிறந்த மாணவர் சமுதாயத்தை நல்வழிப்படுத்தி உருவாக்கிய பெருமைக்குரியவர்.
புதுக்குடியிருப்பு மத்திய கல்லூரி, வித்தியானந்த கல்லூரி ஆகியவற்றில் ஆசிரியராக கடமையாற்றிய இவர் அங்கு விளையாட்டு துறையை மேம்படுத்த காரண கர்த்தாவாகவும், அதனூடாக பல கழங்களில் சிறந்த விளையாட்டு வீரர்களை உருவாக்கிய பெருமைக்குரியவர்.
நாட்டிலும் மாவட்டத்திலும் பலவிதங்களில் சிறந்த உதைபந்தாட்ட நடுவராக பணியாற்றி தனது நடுநிலையினை வெளிப்படுத்தியவர்.
முல்லைத்தீவு கல்வி வலயத்தில் நீண்ட காலமாக உதவிக் கல்விப் பணிப்பாளராக கடமையாற்றி பல மாணவர்கள் தேசிய மட்ட சாதனைகளை அடைய வழிகாட்டியவர்.
இளைஞர்களை விளையாட்டில் ஈர்த்துக் கொள்வதில் பெரும் ஆர்வமுடைய இவர் முல்லைத்தீவு மாவட்ட செயலக மூத்த விளையாட்டு வீர்ர் விருது, மாகாண விளையாட்டுத் திணைக்களத்தின் வடமாகாண மாவட்டத்தின் சிறந்த மூத்த விளையாட்டு விருதினை பெற்றுக்கொண்டவராவார்.