
நிதி அமைச்சர் அஜித் நிவர்ட் கப்ரால் இன்று (13) நாடாளுமன்ற உறுப்பினர் பதவியில் இருந்து விலகுவார் என எதிர்பார்க்கப்படுகிறது.
அவர் இலங்கை மத்திய வங்கியின் ஆளுநராக மீண்டும் நியமிக்கப்படுவார் என அரசியல் தகவல்கள் தெரிவிக்கின்றன.
அதன்படி கப்ரால் தனது இராஜினாமா கடிதத்தை நாடாளுமன்ற பொதுச்செயலாளரிடம் இன்று பிற்பகல் ஒப்படைக்கவுள்ளார். இந்த வார இறுதியில் இலங்கை மத்திய வங்கியின் 16 வது ஆளுநராக அஜித் நிவர்ட் கப்ரால் பொறுப்பேற்கவுள்ளார்.
அஜித் நிவர்ட் கப்ரால் இராஜினாமா செய்ததை அடுத்து வெற்றிடமாக உள்ள நாடாளுமன்ற உறுப்பினர் பதவிக்காக ஜயந்த கெட்டகொடவை நியமிக்க ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன முடிவு செய்துள்ளது.
முன்னதாக, கடந்த மாதம் முன்னாள் அமைச்சர் பசில் ராஜபக்ஷ தேசியப்பட்டியில் ஊடாக நாடாளுமன்றத்துக்கு நுழைவதற்கு வழி வகுக்கும் வகையில் ஜயந்த கெட்டகொட இராஜினாமா செய்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.